×

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின்நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள், உள்ளாட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. நாடு முழுவதும் அனைத்து தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை என்பதால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு கடந்த செப்டம்பர் 2ம் தேதி அமைத்தது.

இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் இந்திய நிர்வாக சேவை அதிகாரி என்.கே.சிங், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே இந்தக் குழுவில் இடம்பெறாதது குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தால் நாட்டின் நலனுக்கு நன்மை அளிக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க உள்ளோம். நாட்டின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு கூறியுள்ளார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்: முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : President ,Ramnath Govind ,Delhi ,Former ,
× RELATED நீதித்துறையில் திறமையானவர்களுக்கு...