
தினசரி எண்ணெய்க் குளியல்
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள நாங்கு நேரியில் ஒரு சுயம்பு வைணவத் தலம் உள்ளது. இத்தலத்திலுள்ள பெருமாளின் பெயர் வானமாமலைப் பெருமாள். இவரது பாதுகையில் நம்மாழ்வாரின் திருவுருவம் உள்ளது. பெருமாளுக்கு தினசரி ஒரு லிட்டர் எண்ணெய் சாத்தப்பட்டு பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாய் வழங்கப்படுகிறது.
ஒரே தலத்தில் பெருமாளின் ஒன்பது வகை திருக்கோலம்
ஆந்திர மாநிலம், கடப்பா அருகிலுள்ள அகோபிலம் மலைக்குடைவரைக் கோயிலில் பெருமாள் 9 வகை திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அவை: 1) அகோபில நரசிம்மர், 2) வராஹ நரசிம்மர், 3) மாலோல நரசிம்மர், 4) யோகானந்த நரசிம்மர், 5) பர்வத நரசிம்மர், 6) காரஞ்ச நரசிம்மர், 7) சக்கரவட நரசிம்மர், 8) பார்கவ நரசிம்மர், 9) ஜுவாலா நரசிம்மர்.
ஏழு தலை நாகத்தில் ஸ்ரீரங்கநாதர்
கர்நடகா மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீரங்கநாதர் ஏழுதலை நாகத்தின் மீது பள்ளி கொண்டிருக்கிறார். இவரை திப்புசுல்தான் தன் அரண்மனையிலிருந்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.
புற்றுநோய் தீர்க்கும் திருந்துதேவன்குடி
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருந்து தேவன் குடியின் நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சாத்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, அனைத்து நோய்களுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் செய்யும் பித்ரு வழிபாடு
மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்று பரசுராமர் அவதாரம். பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர். தாய் ரேணுகாதேவி. தந்தையின் கட்டளைப்படி பரசுராமர் தாய் ரேணுகா தேவியை கொன்றார். இந்த தோஷம் நீங்க, பரசுராமர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் வழியில் 5 கி.மீ. தூரத்திலுள்ள திருவல்லத்தில் தன் தாய்க்கு பித்ரு தர்ப்பணம் செய்தார். இதனால், கேரள மக்களில் பெரும்பாலானோர் அமாவாசை மற்றும் பிற அமாவாசை நாட்களில் இங்கு பித்ரு தர்ப்பணம் செய்கின்றனர். பெண்களும் இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு.
ஆதவன் ஆராதிக்கும் அம்மையப்பர்
கோடீஸ்வரர் அன்னை திரிபுரசுந்தரியுடன் திருவருள்பாலிக்கும் திருத்தலம் திருக்கோடிக்காவல். மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது. சிறந்த சிவபக்தரான சுதர்சனன் என்ற வைஷ்ணவ சிறுவன் ஹரதத்தராக மாற திருவருள் கிடைத்த தலம். ஆனி 19,20,21 தேதிகளில் சூரிய பகவான் தன் பொற்கரங்களால் இவ்விறைவனை வழிபாடு செய்யும் திருத்தலம். இத்தல அம்பிகை, மஹானான ஸ்ரீபாஸ்கரராயரை லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு தன் சந்நதியிலேயே உரை எழுத அருள்பாலித்த தலம். மயிலாடுதுறை கும்பகோணம் ரயில் பாதையில் நரசிங்கன்பேட்டை நிலையத்திலிருந்து வடக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. காவிரி வடகரை வழியாக மயிலாடுதுறை கும்பகோணம் பேருந்து பாதையிலும்
இக்கோயிலை அடையலாம்.
ஆடு வாகன துர்க்கை
நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ தொலைவில் மோகனூரில் உள்ள சிவாலயத்தில் ஆட்டை வாகனமாகக் கொண்ட எட்டு கைகள் உடைய துர்க்கையை புடைப்புச் சிற்பமாக காணலாம். இங்கே ஈசன், அம்பிகை சந்நதிக்கு நடுவே முருகன் தன் துணைவியருடன் எழுந்தருளியுள்ளார். அம்பிகை, தன் மகனை அழைக்க, மகன் நின்ற ஊர் என்பதால் ‘மகனூர்’ என்றானது, பிராகாரத்தில் வாராஹி, வைஷ்ணவி, சாமுண்டி தேவியர்களையும் சிற்ப வடிவில் தரிசிக்கலாம்.
தொகுப்பு: ஜெய செல்வி
The post பெண்கள் செய்யும் பித்ரு வழிபாடு appeared first on Dinakaran.