×

திருக்குறளில் வில்லும் அம்பும்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வில்லும் அம்பும் தமிழர்களின் மிகப்பழைய போர்க் கருவிகள். வாள், வேல் போன்ற கருவிகள் இருந்தாலும் தமிழர்கள் வில்லையும் அம்பையும் பயன்படுத்திப் போரிட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன.வில்லைப் பற்றியும் அம்பைப் பற்றியும் திருவள்ளுவர் திருக்குறளில் பேசுகிறார்.அம்பு நேரானது. வில் வளைந்தது. வளைந்த வில்லின் நாணில் நேரான அம்பைப் பொருத்தி, இலக்கு நோக்கி எய்து போரில் தமிழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

‘கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு
அன்னவினைபடு பாலால் கொளல்’
(குறள் எண் 279)

வடிவால் நேரானதுதான் என்றாலும் அம்பு கொடியது. யாழ் வளைந்திருந்தாலும் இனிய இசையைத் தரும். எனவே மனிதர்களை அவர்களின் வடிவத்தால் எடை போட வேண்டாம். அவர்களின் செயலைப் பார்த்தே எடைபோட வேண்டும்.

`கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.’
(குறள் எண் 772)

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொல்ல எய்த அம்பைப் பிடித்திருப்பதைக் காட்டிலும் எதிர்த்துவரும் யானையின் மீது பட்டும் அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது இனியது.

`வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை’
(குறள் எண் 872)

`வில்லேர் உழவர்’ என்றால் விற்படை மூலம் போர்செய்யும் மன்னர்கள். `சொல்லேர் உழவர்’ என்றால் சொல்லால் இலக்கிய விவசாயம் புரியும் எழுத்தாளர்கள்.

`அரசனைப் பகைத்தாலும் எழுத்தாளரின் விரோதத்தை மட்டும் சம்பாதித்துவிடாதே!’ என்கிறது வள்ளுவம்.இவ்விதம் தன்காலத்தில் புழக்கத்தில் இருந்த போர்க் கருவிகளான வில்லையும் அம்பையும் தன் கருத்துக்களைச் சொல்லப் பயன்படுத்தியிருக்கிறார் வள்ளுவர்.

*பழந்தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்கள் மூவருக்கும் தனித்தனிக் கொடிகள் இருந்தன. சேரனுக்கு வில் கொடி. சோழனுக்குப் புலிக்கொடி. பாண்டியனுக்கு மீன்கொடி. சேரமன்னர்கள் வில்லாற்றலில் சிறந்து விளங்கியமையால் தங்கள் கொடியில் வில் இலச்சினையைப் பொறித்துக் கொண்டார்கள்.

`மதுரையில் பறந்த மீன்கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் செய்த சேரன் வில்லைப்
புருவத்தில் கண்டேனே!’

என `பூவா தலையா’ திரைப்படத்தில். எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் டி.எம் செளந்தரராஜன் குரலில் ஒலிக்கிறது கவிஞர் வாலி எழுதிய பாடல்.

*பழங்காலத்தில் ஒவ்வொரு வில்லுக்கும் ஒரு பெயர் இருந்தது. சிவபெருமானின் கையில் உள்ள வில்லின் பெயர் பிநாகம் என்பது. அந்த வில்லைக் கையில் வைத்திருக்கும் காரணத்தால் அவருக்குப் பினாகபாணி எனப் பெயர் வழங்கப்படுகிறது.

கண்ணன் கையிலும் ஒரு வில் உண்டு. அதன்பெயர்- சார்ங்கம். `தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்’ என மழை சார்ங்க வில்லிருந்து பாயும் அம்புகளைப் போல் பொழிய வேண்டும் என ஆண்டாள் திருப்பாவையில் பிரார்த்தனை செய்கிறாள்.காதல் கடவுளான மன்மதன் தன் கரத்தில் கரும்புவில்லை வைத்துக் கொண்டிருப்பதாகவும் அந்தக் கரும்பு வில்லிலிருந்து மலர் அம்புகளைக் காதலர்கள் மேல் எய்து அதன் மூலம் அவன் காதல் உணர்ச்சியை மனத்தில் தோற்றுவிப்பதாகவும் புராணங்கள் பேசுகின்றன.இராமனின் வில்லுக்குக் கோதண்டம் என்பது பெயர்.

`தாயே என் தெய்வம் என்ற – கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட – தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் – கோதண்ட
ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் – ஸ்ரீஜெய
ராமன்’

– எனக் கையில் கோதண்டத்தை வைத்துக் கொண்டிருக்கும் கோதண்டராமனைப் போற்றுகிறார் கவியரசர் கண்ணதாசன்.

ராமாயணத்தில் ராமனுக்கு வில்வித்தை கற்பித்தவர்கள் ஒருவரல்ல. இருவர். தன் சகோதரர்கள் மூவரோடும் ராமன் குருகுலத்தில் பயின்றபோது வசிஷ்ட மகரிஷியிடம் அவன் வில்வித்தை கற்றுக்கொண்டான்.விஸ்வாமித்திரர் ராமனையும் லட்சுமணனையும் தன் வேள்வியைக் காப்பாற்றுவதற்காக தசரதரிடமிருந்து அழைத்துச் சென்றார். அப்போது பல திவ்ய அஸ்திரங்களை ராமனுக்கு அளித்து அவனின் வில்லாற்றலை வளர்த்து மேம்படுத்தியவர் விஸ்வாமித்திர மகரிஷி.

புராண காலத்தில் திருமணம் என்றால் நடத்தப்படுவது வில் போட்டியே தவிர வாள்போட்டியோ வேல் போட்டியோ அல்ல. ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வில்போட்டி மூலமே மணமகன் தேர்வு செய்யப்படுகிறான்.சீதையின் தந்தை ஜனகரிடம் இருந்த வில் சிவதனுசு. ஒருகாலத்தில் சிவபெருமானிடம் இருந்த வில் அது. பத்தாயிரம் பேர் சேர்ந்து தூக்கினால்தான் தூக்கக் கூடிய பிரம்மாண்டமான வில்.

விளையாடிக்கொண்டிருந்த சீதை ஒருமுறை அந்த வில்லை விளையாட்டாகவே அகற்றி வைத்ததைக் கண்ட ஜனகர் வியப்பில் ஆழ்ந்தார். சீதையின் சுயம்வரத்தில் அந்த வில்லே பணயப் பொருளாக வைக்கப் பட்டது. அந்த மாபெரும் வில்லை எடுத்து உயர்த்தி நாணேற்றுபவர்க்கே சீதை என அறிவிக்கப்பட்டது. ராவணன் உள்பட யார்யாரோ ஆசைகொண்டு வந்தார்கள். ஆனால் யாராலும் வில்லை நகர்த்தக்கூட முடியவில்லை.

அப்புறமல்லவா எடுத்து நாணேற்ற?

சீதாதேவி பூமித் தாயின் புதல்வியல்லவா? எனவே சீதைக்குப் பொருத்தமற்றவர்கள் வந்தபோது வில்லை அவர்கள் தூக்க முடியாதபடி, இறுகப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாளாம் பூமித்தாய்.எனவே வில்லைத் தூக்க வேண்டும் என்றால் வில்லோடு சேர்த்து முழு பூமியையும் தூக்கினால்தான் அதைத் தூக்கமுடியும்.

வராக அவதாரத்தின்போது பூமியைத் தூக்கியவராயிற்றே திருமால்?

திருமாலின் வடிவமான ராமபிரான் வந்தபோது அவனே தன் மகள் சீதைக்கு ஏற்ற கணவன் என ஆனந்தமடைந்தாள் பூமித்தாய். எனவே அவள் தன் பிடியை விட்டுக் கொடுத்தாள். அதனால் சீதையின் கழுத்தில் சூட்டும் பூமாலையைத் தூக்குவதுபோல வில்லைத் தூக்கி நாணேற்றினான் ராமன். வில் முறிந்தே போயிற்று. சீதை ஏற்கெனவே ராமனை உப்பரிகை மேல் இருந்து பார்த்து மனம் பறிகொடுத்தவள் ஆயிற்றே? அது வில்லை வளைக்கும் நிபந்தனையைப் பூர்த்தி செய்து நடந்த திருமணம்தான் என்றாலும் அண்ணலும் நோக்க அவளும் நோக்கி அதனால் விளைந்த காதல் திருமணமும் கூடத்தான் அல்லவா?

எல்லாப் பெண்களுக்கும் சீதைக்கு அமைந்ததைப் போல அவரவர்களுக்குப் பிடித்த கணவன் அமையவேண்டும் என்பதால்தான் ஒவ்வொரு கல்யாணத்திலும் சீதா கல்யாணம் வைபோகமே என்று பாட்டுப் பாடுகிறார்கள்.ராமன் பிறப்பதற்கும் முற்பட்ட காலம். தசரதர் கானகத்தில் வேட்டையாடச் சென்றார், அதிகாலையில் யானை நீர் அருந்துவது போன்ற ஒரு சப்தத்தைக் கேட்டார்.அது யானையல்ல, சிரவணன் என்ற சிறுவன் கண்ணில்லாத பெற்றோருக்காக ஆற்றிலிருந்து குடத்தில் நீர் எடுக்கும் சப்தம்தான் அது என்பதை தசரதர் அறியவில்லை. சப்தவேதி என்ற வில்வித்தையில் தேர்ந்தவர் தசரதர். ஒலிவரும் இடம்நோக்கி அம்பெய்தல்தான் அந்த வித்தை.

ஒலி வந்த திசைநோக்கி அம்பெய்தார். சிறுவன் மாண்டுபோனான், பதறினார் தசரதர்.பின்னர் விவரமறிந்த அந்தச் சிறுவனின் பெற்றோர் தங்களைப் போன்றே தசரதனும் புத்திர சோகத்தில் சாகக் கடவது எனச் சபித்துவிட்டு தீப்பாய்ந்து உயிர் நீத்தார்கள்.அந்தச் சாபமே வரமாகி குழந்தையற்ற தசரதனுக்குக் குழந்தைகள் பிறந்தார்கள், ஆனால் அவர்கள் நால்வரும் அருகில் இல்லாத நேரத்தில் சாபத்தின்படி தசரதர் மரணம் நேர்ந்தது என்கிறது ராமாயணம் மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன் வில்லாற்றலில் தேர்ந்தவன். `வில்லுக்கு விஜயன்’ என்றே போற்றப்படுபவன்.

குரு துரோணரின் மோதிரம் கிணற்றில் விழுந்துவிட்டது. அர்ச்சுனன் தன் வில் மூலம் அம்பு ஒன்றைச் செலுத்தி அந்த மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான்.ஒரு மரத்தின் அத்தனை இலைகளையும் ஒரே அம்பால் துளையிட வல்லவன் அர்ச்சுனன்.ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. அர்ச்சுனன் தன் வில்லிலிருந்து ஒரே ஒரு அம்பைக் குறிபார்த்து எய்தான். அம்பு முதலையின் தலையைத் துண்டித்தது.

துரோணர் அர்ச்சுனனின் ஆற்றலைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, பற்பல அஸ்திர ரகசியங்களை அவனுக்கு உபதேசம் செய்தார்.அர்ச்சுனனது வில்லின் பெயர் காண்டீபம். பாஞ்சாலியைத் தன் வில்லாற்றலாலேயே வெற்றிகொண்டான் அவன்.

துரியோதனனை அழிப்பதாக
`கார்த்தடங் கண்ணிஎன் தேவி அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லிலும் ஆணை’

எனப் பாஞ்சாலி மீதும் தன் வில்லான காண்டீபத்தின் மீதும் ஆணையிட்டு அர்ச்சுனன் சபதம் செய்வதாய் பாஞ்சாலி சபதத்தில் எழுதுகிறார் பாரதியார்.மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு இணையான இன்னொரு வில் வீரன் கொடைக்குப் பெயர்பெற்ற கர்ணன்.குந்திதேவி கேட்ட வரங்களை மனத்தில் கொண்டு கர்ணன் விட்டுக் கொடுத்ததால்தான் அவனை அர்ச்சுனனால் போரில் கொல்ல முடிந்தது. இல்லாவிட்டால் கர்ணனைக் கொல்ல அர்ச்சுனனைப் போன்ற மாபெரும் வில்லாளியாலும் இயலாது.

துரோணரிடம் வில்வித்தை பயில விரும்பினான் ஏகலைவன். துரோணர் அவனுக்குக் கற்றுக் கொடுக்க மறுத்துவிட்டார். அவன் வில்வித்தை கற்கும் அருகதை படைத்த ஷத்திரியன் அல்லவே?எனினும் துரோணரைப் போல் ஒரு பிரதிமையைச் செய்து வைத்து பக்தியோடு அதன் முன் வில்வித்தை பயின்று வில் கலையில் தேர்ச்சி பெற்றான். பின்னர் அவன் கட்டை விரலை துரோணர் தட்சிணையாகப் பெற்றார் என்பதை மகாபாரதம் விவரிக்கிறது.ஷத்திரியர்கள் அனைத்து சமுதாயத்தையும் காக்கும் கடமை உடையவர்கள். எனவே வில்வித்தை கற்பது அவர்கள் உரிமை.

மற்றவர்கள் வில்வித்தை பயின்று பின்னர் சமூக விரோதிகளாக மாறினால் என்ன செய்வது? எனவேதான் ஷத்திரியர் அல்லாதாருக்கு வில்வித்தை மறுக்கப்பட்டது என்பது புராணங்கள் சொல்லும் காரணம். யுத்தத்தில் சிகண்டியால் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்புகளால் ஆன அம்புப் படுக்கையில்தான் தமது இறுதிக் காலத்தை எதிர்பார்த்துப் படுத்திருந்தார். அப்போது அவரது தாகம் தீர்க்க ஒரே அம்பால் பூமியிலிருந்து கங்கை நீரைக் கொண்டுவந்து பீஷ்மரின் வாயில் விழுமாறு செய்தான் அர்ச்சுனன் என்கிறது மகாபாரதம். புருவத்திற்கு வில்லை உவமையாகச் சொல்வது வழக்கம்.

`வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை
வேலவா வடி வேலவா அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி ஆனது
வேலவா வடி வேலவா!’

என முருகனைப் பற்றிய தம் காவடிச் சிந்துப் பாடலில் எழுதுகிறார் மகாகவி பாரதியார். வில்லைப் போன்ற தன் புருவத்தை முருகப் பெருமான் நெரித்தபோதே, அந்தச் சீற்றம் தாங்கமாட்டாமல் மலை பொடிப்பொடி ஆயிற்றாம்!போர்க் கருவியான வில் ஓர் இசைக் கருவியாகவும் பின்னாளில் உருமாற்றம் பெற்றதுதான் வியப்பு. வில்லைத் தவிர வேறு எந்தப் போர்க்கருவியும் இசைக்கருவி ஆகவில்லை.

வில்லின் துணைகொண்டு அதன் நாணை மீட்டிப் பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. இன்றும் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. ஏழு நிறங்களுடைய வானத்து வில்லை, அது வளைந்திருப்பதால்தான் வானவில் என்று சொல்கிறோம்.

திருக்குறளிலும் வரும் வில்லின் புகழ் மண்ணிலிருந்து வானம் வரை விரிந்து பரந்திருக்கிறது. குறள் வெண்பா என்ற இலக்கண வில்லில், கருத்து என்ற கூர்மையான அம்பை வைத்து வள்ளுவர் இலக்குத் தவறாமல் எய்கிறார். பயில்பவர் மனத்தில் அவரது கருத்து அம்புகள் பாய்ந்து தைத்து மனத்தில் உள்ள மாசுகளை அழிக்கின்றன.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post திருக்குறளில் வில்லும் அம்பும்! appeared first on Dinakaran.

Tags : tamils ,
× RELATED இலங்கை தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடி...