
ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்
எந்த ஒரு கலையும் கைவரப் பெற பயிற்சி என்பது முக்கியம். பயிற்சி அனுபவங்களையும் அதிசயங்களையும் நமக்கு கற்றுக் கொடுக்கும். எல்லா விஷயங்களையும் படிப்பினால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. படிப்பு என்பது அறிவின் திறவுகோல் மட்டுமே. அதனை முறைப் படியாக நாம் பயிற்சி செய்யும் பட்சத்தில் மேன்மேலும் அந்தக் கலையின் நுட்பங்களையும் ஆச்சரியங்களையும் கண்டு உணரலாம். டாரட் கணிப்பாளர் பிரச்னையுள்ள ஒருவருக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பது நிச்சயம்.
நன்கு கலைக்கப்பட்ட டாரட் துருப்புச் சீட்டுகளை (78) ஒரு மேஜை மீது கிடத்தப்பட்ட தூய்மையான வெல்வெட் துணியின் மீது அரை வட்டமாக வைக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி எதிரே உள்ள கேள்வியாளரின் கேள்விகளை மனதில் இருத்திக் கொண்டு இடது கையால் ஒரு டாரட் துருப்பு சீட்டை எடுக்க வேண்டும். கேள்வியாளரின் கேள்வியை பொருத்தே துருப்பு சீட்டுகள் எடுக்கும் முறையும் பலன் கூறும் முறைகளும் மாறுபடுகின்றன.
ஒவ்வொரு டாரட் துருப்புச் சீட்டுகளில் உள்ள குறியீடுகளும் ஓவியங்களும் பலன்களைச் சொல்லுகின்றன. அவ்வாறு சொல்லும் பலன்களை டாரட் கணிப்பாளர் இன்னும் விரிவாக்கிக் கொண்டே செல்வார். இதில் அவருடைய உள்ளுணர்வும் அனுபவமும் துணை செய்யும். டாரட் துருப்புச் சீட்டுகள் தலைகீழாக வந்தால் எதிர்மறை பலன்களை சொல்லுகிறது என்று பொருள்.
உதாரணத்திற்கு: எதிர்காலப் பலன்களுக்கான மூன்று டாரட் துருப்புச் சீட்டுகளை எடுத்திருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். முதல் டாரட் துருப்புச் சீட்டு இறந்த காலத்தையும் இரண்டாவது டாரட் துருப்புச் சீட்டு நிகழ்காலத்தையும் மூன்றாவது டாரட் துருப்புச் சீட்டு எதிர்காலத்தையும் குறிக்கும். முதல் டாரட் துருப்புச் சீட்டில் சக்தி (Strength) என்ற ஓவியம் தலைகீழாக வந்திருந்தால் உங்களின் வேகம் மற்றும் சந்தேகம், இரக்கமின்மையால் பல நல்ல விஷயங்களை இழந்திருப்பீர்கள் என கொள்ளவும்.
இரண்டாவது சீட்டில் வித்தைக்காரன் (Magician) வந்திருந்தால், நிகழ்காலத்தில் நீங்கள் சுய விழிப்புணர்வுடன் முன்னேற்றத்தை நோக்கி முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளலாம். மேலும், உங்கள் சிந்தனை உங்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது எனவும் உங்களுடைய திறமை உங்களுக்கு முழுபலன் அளிக்கும் வெற்றியை நோக்கி நீங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றும் பலன்களாக வரும்.
மூன்றாவதாக உள்ள டாரட் துருப்புச் சீட்டில் உயர் பெண் தேவதை (The High Priestess) வந்திருந்தால் உங்களின் எதிர்காலம் ஒரு குருவின் ஆசிர்வாதத்தால் நல்வாழ்க்கை உண்டாகும் என்றும், நீங்கள் உங்களை சுற்றி உள்ளவற்றை அறிந்து கொண்டு உள்ளுணர்விலிருந்து உங்களை சரி செய்து கொள்ளுங்கள் உங்களை பெண் காக்கும் என்றும் பலன்களாக சொல்லும் பொழுது ஆலோசனைகளும் தீர்வுகளும் முழுமை பெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
ஒவ்வொரு டாரட் துருப்புச் சீட்டும் உங்களுக்கு பலன் சொல்ல வேண்டியதை ஓவியங்களாகவும் பஞ்சபூத தத்துவத்தில் எதை உணர்த்துகிறது என்றும் அந்த டாரட் துருப்புச் சீட்டு எந்த கிரகத்தை ஆளுமை செய்கின்றது என்றும் பிரபஞ்சம் டாரட் கணிப்பாளருக்கு உணர்த்துகிறது. டாரட் துருப்புச் சீட்டுகளில் ஆளுமை செய்யும் கிரகம் நேராக வந்தால் நேர்மறை பலனையும் அதே டாரட் துருப்புச் சீட்டு தலைகீழாக வந்தால் எதிர்மறை பலனையும் உணர்த்துகிறது என்று பொருள் கொள்ளலாம்.
டாரட் துருப்புச் சீட்டுகளில் குறீயிடுகள்
நட்சத்திரக் குறியீடு: தெய்வம் உங்களை வழிநடத்தும் என்பதையும் தெய்வீக சக்தி உள்ளவர் என்பதையும் குறிக்கும்.
முடிவிலி குறியீடு: முடிவற்றது என்பது இதன் பொருள். முடிவடையா முழுமை என்று பொருள்.
சிங்கக் குறியீடு: ஆளுமை, தலைமை மற்றும் வலிமையை குறிக்கின்றது என்று பொருள்.
தேவதை குறியீடு: குலதெய்வம் அல்லது உபாசனை செய்யும் பெண் தெய்வம் மற்றும் நற்செய்தியுடன் பெண் வருவாள் என்று பொருள்.
மலை குறியீடு: பெரிய யாத்திரையும் முன்னேற்றத்திற்கான முயற்சி தேவை என்பதையும் ஆன்மிகத்தையும் குறிக்கிறது என்று பொருள்.
சூரியகாந்தி குறியீடு: தலைமையை பின்பற்றி பயணித்தால் வாழ்வில் உயர்வு என்பதை குறிக்கிறது என்று பொருள்.
சந்திரக் குறியீடு: மன ஆற்றல், பெண் மற்றும் தாயை குறிக்கிறது என்று பொருள்.
பூனை குறியீடு: ரகசியம் காப்பாற்றுதலின் அவசியத்தையும் தந்திரத்தையும் பாதுகாப்பை மேற்கொள்ளுதல் அவசியத்தையும் குறிக்கிறது என்று பொருள்.
இவ்வாறு ஒவ்வொரு டாரட் துருப்புச் சீட்டுகளும் சின்னச் சின்ன குறியீடுகளும் சின்ன விஷயங்களை உங்களுக்கு பலன்களுக்கான பொருளை உணர்த்துகிறது. இது போல் இன்னும் ஏராளமான குறீயிடுகளும் சீட்டுகளில் உள்ள ஓவியங்களும் பல விஷயங்களை நமக்கு உணர்த்தும். ஆய்வும் பயிற்சியும் சிறந்த நற்பலன்களைத் தரும்.
கிழமையும் ஆபிரகாம் லிங்கனும்
கிழமைகள் அனைத்தும் ஏழு கிரகங்களின் ஆதிக்க நாட்கள். அது போலவே ஆபிரகாம்லிங்கன் வாழ்விலும் கிழமைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஆபிரகாம்லிங்கன் அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி. இதன் கூட்டு தொகை ஏழு. இது ஏழு வாரத்தினை நினைவுப்படுத்துகிறது. ஆபிரகாம்லிங்கன் பிறந்ததினம் ஞாயிறு. முதல் தேர்தலில் திங்கட்கிழமை அன்று போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு செவ்வாய் கிழமை அன்று போட்டியிட்டு வெற்றி கண்டார். புதன்கிழமை, அமெரிக்க பார்கவுன்சில் உறுப்பினரானார். இவர் நிகழ்த்திய உரைகளில் பிரசித்தி பெற்றது ‘கெட்டிஸ்பர்க்’ உரையாகும். இது வியாழக்கிழமை அன்று நிகழ்த்தினார். வெள்ளிக் கிழமை அன்று துப்பாக்கியால் சுடப்பட்டார். சனிக் கிழமை அன்று மருத்துவமனையில் மரணம் அடைந்தார் என்பது வரலாறு.
The post டாரட் கணிப்புகள் 3 appeared first on Dinakaran.