
சென்னை: சென்னை தெருக்களில் போக்குவரத்திற்கு இடையூறாக, கேட்பாரற்று கிடந்த 514 வாகனங்களை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால், பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. கால் டாக்சிகள், ஆட்டோக்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, சென்னை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, கேட்பாரற்ற வாகனங்களை பறிமுதல் செய்ய மாநகராட்சி முடிவெடுத்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் தெருக்களிலும், சாலைகளிலும் கைவிடப்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மோட்டார் வாகன சட்டம் 380ன்படியும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 128ன்படியும் இந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மாநகராட்சி பகுதிகளில் வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் 271 வாகனங்கள், மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் 644 வாகனங்கள் மற்றும் தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் 393 வாகனங்கள் என மொத்தம் 1,308 வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், கேட்பாரற்றும் நிறுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மீது வழக்குகள் உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பின்னர் வாகனம் குறித்த தகவல்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடும்.
அதில் இருந்து 30 நாட்களுக்குள் வாகனங்களை எடுத்துக்கொள்ள உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகும் உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சியால் ஏலம் விடப்படும். இந்நிலையில், செப்.1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சாலையில் கைவிடப்பட்ட 1,308 வாகனங்களில் சென்னை காவல்துறை உதவியுடன் 79 நாட்களில் 514 வாகனங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறையின் வாகனங்களை எடுத்து செல்லும் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், கேட்பாரற்ற வாகனங்களை அகற்றும் பணி தாமதமாவதாக கூறப்படுகிறது. எனவே, மீதமுள்ள வாகனங்களை மாநகராட்சியுடன், சென்னை காவல்துறையும் இணைந்து வேகமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post 79 நாட்களில் யாரும் உரிமை கோராத வாகனங்கள் 1,308 சென்னை தெருக்களில் கேட்பாரற்று கிடந்த 514 வாகனங்கள் பறிமுதல்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.