ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது

தர்மபுரி: மின் இணைப்புக்காக தடையில்லா சான்று வழங்குவதற்கு ₹25 ஆயிரம் லஞ்சம் வாங்கி பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் 7 பேர் பணியாற்றி வருகின்றனர். வெங்கடாஜலம்(57) என்பவர், பேரூராட்சியில் குடிநீர் சப்ளை செய்யும் அலுவலராக உள்ளார். இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட விஜயநகரம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்(48) என்பவர், புதிதாக தான் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக தடையில்லா சான்று பெற பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, தடையில்லா சான்று வழங்க வேண்டுமானால், ரூ.25 ஆயிரத்தை லஞ்சமாக தர வேண்டும் என பேரூராட்சியில் வெங்கடாஜலம் கேட்டுள்ளார். அதன்படி, இளவரசன் ₹25 ஆயிரம் லஞ்சப்பணத்தை நேற்று காலை கொடுத்துள்ளார். ஆனால், அதன் பின்னர் அவர், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில், இதுகுறித்து புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்றிரவு 7 மணியளவில், பொ.மல்லாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர். மேலும் வெங்கடாஜலத்திடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அவர் ₹25ஆயிரம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சோதனையானது நேற்று மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது.

The post ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: