போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஐகிரவுண்ட் இருவழிச்சாலை 4 வழிச்சாலையாகிறது

நெல்லை : பாளை.யில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஐகிரவுண்ட் செல்லும் இருவழிச்சாலை 4 வழிசாலையாக மாறுகிறது. இதற்காக ₹3 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.பாளை. பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் இருந்து அரசு மருத்துவமனை வரை வடக்கு பாளை. மேட்டுத்திடல் சாலை உள்ளது. இருவழிச்சாலையாக உள்ள இந்தச் சாலையில் அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள், மாவட்ட நூலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பாளை. மேட்டுத்திடலில் உள்ள நெல்லை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்சுகளும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வடக்கு பாளை. மேட்டுத்திடல் சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திட்டத்திற்காக ₹3 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் சாலையோரம் இருந்த 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து அடுத்த கட்டப் பணிகள் விரைவில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஐகிரவுண்ட் இருவழிச்சாலை 4 வழிச்சாலையாகிறது appeared first on Dinakaran.

Related Stories: