![]()
திருவொற்றியூர்: கோயில் திருவிழா தொடர்பான கூட்டத்தில், பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் அதிமுக ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவரை வெட்டி கொலை செய்தோம், என கைதான 5 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மணலி புதுநகர் அடுத்த விச்சூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் வைதேகி. அதிமுக நிர்வாகியான இவரது கணவர் சுமன் (47), நேற்று முன்தினம் மாலை விச்சூர் மேட்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், சுமனை சுற்றிவளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதனைபார்த்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த சுமனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுமன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணலி புதுநகர் போலீசார், சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த சரண் (34), கரண் (24), ராமு (24), எண்ணூர் பகுதியை சேர்ந்த புவனேஷ்குமார் (31), நித்திஷ் (22) ஆகிய 5 பேர் சுமனை வெட்டிக் கொன்றது தெரிந்தது.
அவர்களை நேற்று பிடித்து விசாரித்தனர். அதில், விச்சூர் பெருமாள் கோயில் திருவிழா தொடர்பான கூட்டம் கடந்த 1ம் தேதி நடைபெற்றபோது, திருவிழா துண்டறிக்கையில் சரண் தனது பெயரை போட வேண்டும் என்று ஊர் பெரியவர்களிடம் கூறி, அங்கிருந்த பெரியவர்களை மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்கு சுமனின் சகோதரர் சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் சரணுக்கும், சுரேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது சரண், சுரேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். அங்கிருந்த சுமன், சகோதரருக்கு ஆதரவாக சரணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண், ஊர் மக்கள் முன்னிலையில் தன்னை அசிங்கப்படுத்திய சுமனை நண்பர்களுடன் வந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட 5 பேரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் ஊராட்சி துணை தலைவரின் கணவரை வெட்டி கொன்றோம்: கைதான 5 பேர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.
