×

தொடர் விடுமுறையை கொண்டாட ஏற்காடு, கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஏற்காடு: தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏற்காடு மற்றும் கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஏற்காடு உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஏற்காடு வந்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக, சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர். குடும்பத்துடன் வருபவர்கள், புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டோர் அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், ஏரிப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பூத்துக் குலுங்கும் பல்வேறு மலர்ச்செடிகளை கண்டு ரசித்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காட்சி முணையம், ரோஜா தோட்டம், பக்கோடா பாய்ண்ட், தாவரவியல் பூங்கா, சினிபால்ஸ், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் மற்றும் பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்.

காலை முதலே கார், வேன், பஸ் மற்றும் டூவீலர்களில் திரளானோர் வந்த வண்ணம் இருந்தனர். இதனால், ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில், அனைத்து கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது. இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கார்கள், சுற்றுலா வேன்கள் முறையாக நிறுத்திவிட்டு சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வகையில், முக்கிய இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், கண்காணிப்பை போலீசார் தீவிரபடுத்த ஏற்படுத்த வேண்டும்,’ என்றனர்.

கொல்லிமலை: நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டைய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்திருந்தனர். கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, சினி பால்ஸ், சந்தன பாறை அருவி, மாசிலா அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர், அறப்பளீஸ்வரர் கோயில் மற்றும் எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சி முனையம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு ரசித்தனர்.

மாசிலா அருவியில் வனத்துறையின் மூலம் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் -குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த பயணிகள் மாலை வீடு திரும்பும் வழியில் ்சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் குவிக்கப்பட்டிருந்த அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், பலா மற்றும் மிளகு உள்ளிட்டவற்றை வீட்டிற்கு வாங்கிச் சென்றனர்.

The post தொடர் விடுமுறையை கொண்டாட ஏற்காடு, கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kolimalaye ,Accadu ,Tamil Nadu ,Kolimalayas ,
× RELATED தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு...