திருவொற்றியூர், அக்.2: மூலக்கடையில் இருந்து ஜி.என்.டி. சாலை வழியாக ரெட்டேரி, செங்குன்றம், மஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தள்ளுவண்டிகள், சாலையோரக் கடைகள் போன்றவற்றை சாலையோரத்தில் வைக்கக்கூடாது என்றும் தடை விதித்துள்ளனர். கனரக வாகனங்களையும் இந்த சாலையில் வெகு நேரம் நிறுத்த தடை விதித்துள்ளனர். இதில் தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மாதவரம் காவல் நிலையம் அருகே ஜி.என்.டி. சாலையில் தனியார் சிலர் ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருகின்றனர்.
இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, இந்த இடத்தில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. புதிய சாலை அமைக்க முடியாத நிலையும் உள்ளது. மேலும் இந்த ஆக்கிரமிப்பால் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணி தொடர முடியாமல் பாதியில் நிற்கிறது. எனவே இங்குள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் கவுன்சிலர் கனிமொழி ராமகிருஷ்ணன் மனு அளித்துள்ளார். பொதுமக்களும் இந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி அந்த பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மூலக்கடை அருகே ஆக்கிரமிப்பு கடைகளால் கால்வாய் பணி பாதிப்பு: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.