×

‘‘விரக்தியா? வெறுப்பா?’’ அரசியலில் என்னை விடுவித்து விட்டால் தோட்ட வேலைக்கு சென்று விடுவேன்: அமித்ஷாவை சந்திக்கும் முன் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

கோவை: அரசியலை விட்டு என்னை விடுவித்து விட்டால் நான் தோட்ட வேலைக்கு சென்று விடுவேன் என்று டெல்லி செல்லும் நிலையில் கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதப் பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் இன்று பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோவில்பாளையம் அடுத்த எஸ்.எஸ்.குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியலை விட்டு என்னை விடுவித்து விட்டால் நான் தோட்ட வேலைக்கு (விவசாயம்) சென்று விடுவேன். அரசியலில் இருக்க வேண்டும் என்று இருக்கிறேன். ஒரு சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசியலை ஒரு டூல்சாக பார்க்கிறேன். அரசியலைப் பொறுத்தவரை 70 சதவீதம் நெகட்டிவாகவும், 30 சதவீதம் பாசிட்டிவ்வாக பார்க்கிறேன். அரசியல் கொஞ்சம் நெகட்டிவ் அதிகமாக இருக்கக்கூடிய துறை. இதில் கிடைக்கக்கூடிய மாற்றம் என்பது மற்ற துறைகளை காட்டிலும் வேகமாக கிடைக்கும்.

மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் அரசியலில் இருக்கிறேன். பொறுத்திருப்போம். காலமும் நேரமும் வரும் வரை நமது பணியை செய்து கொண்டே இருப்போம். என் முன்னிலையில் ரவுடிகள் பாஜவில் இணைவதில்லை. சில பேர் தவறான மனிதராக இருந்தாலும் கூட, தன்னை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அரசியலை பார்க்கின்றனர். அதற்கு பாஜ ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக முறித்தபிறகு அண்ணாமலை, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமிஷாவை சந்திக்க கோவையில் இருந்து இன்று மாலை புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் பாஜ தலைமையில் தனி அணியாக போட்டியிட வேண்டும் என அவர் அறிக்கை அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக அவர் அளித்தபேட்டியில் ‘‘அரசியலில் இருந்து என்னை விடுவித்துவிட்டால் நான் தோட்ட வேலைக்கு செல்வேன் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரக்தியில் பேசினாரா? அல்லது மேலிட தலைவர்கள் தன் முடிவை ஏற்காவிட்டால், அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என மிரட்டுவதற்காக பேசினாரா எனத் தெரியவில்லை.

The post ‘‘விரக்தியா? வெறுப்பா?’’ அரசியலில் என்னை விடுவித்து விட்டால் தோட்ட வேலைக்கு சென்று விடுவேன்: அமித்ஷாவை சந்திக்கும் முன் அண்ணாமலை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Amit Shah ,Coimbatore ,Delhi ,
× RELATED என்னால் மன்னிப்பு கேட்க முடியாது :...