×

அம்பத்தூர் அருகே சோகம் ஏசியில் மின்கசிவால் தீவிபத்து மூச்சுத்திணறி தாய், மகள் பலி: போலீசார் விசாரணை

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே ஏசியில் காஸ் கசிந்து உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு, ஏகாம்பரம் நகரை சேர்ந்தவர் ஆதிலா (50). இவரது, கணவர் ரகுமான் கான், கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகள் நஸ்ரின் (16) தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தாய், மகள் இருவரும் உறவினர் வீட்டின் தரைதளத்தில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தாய், மகள் இருவரும் படுக்கை அறையில் தூங்க சென்றனர். நேற்று காலை படுக்கை அறை முழுவதும் புகை மூட்டமாக இருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த அக்கம் பக்கத்தினர், கதவை திறக்க முயன்றனர். ஆனால், உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று, தீயை கட்டுப்படுத்தினர். அப்போது, தாய், மகள் இருவரும் தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஆதிலா, நஸ்ரின் ஆகிய 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், 2 பேரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஏசியில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதால், மூச்சுத்திணறல் காரணமாக தாய், மகள் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அம்பத்தூர் அருகே சோகம் ஏசியில் மின்கசிவால் தீவிபத்து மூச்சுத்திணறி தாய், மகள் பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sogam AC ,Ampathur ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் பால் பண்ணையை...