×

சென்னையில் கேட்பாரற்று திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் ₹10,000 ஆக உயர்வு: மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை, செப்.30: சென்னை மாநகரில் கேட்பாரற்று திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை ரூ.10,000 ஆக உயர்த்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட மாமன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சென்னை மாநகராட்சி எல்லை பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டு மாடு ஒன்றிற்கு அபராத தொகை ரூ.2 ஆயிரம் என்பதை ரூ.5 ஆயிரம் எனவும், பராமரிப்பு செலவை நாள் ஒன்றுக்கு ரூ.1000 கூடுதலாக வசூலிக்கவும், மீண்டும் அதே மாடுகள் பிடிக்கப்பட்டால் அபராத தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதேபோல, 15 மண்டலங்களிலும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து தினக்கூலியாக ஒரு நபருக்கு ரூ.687 வழங்க அனுமதி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ரூ.640 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் பயோ மைனிங் என்னும் உயிரியல் முறையில் அழந்து தூய்மைப்படுத்தும் பணிக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன்: எனது பகுதியில் 18,600 தெருவிளக்கு உள்ளன. அதில் 5000க்கும் மேற்பட்ட விளக்குகள் பழுதான நிலையில் உள்ளன. 20 மீட்டருக்கு ஒரு தெரு விளக்கு என இருக்க வேண்டும். ஆனால் எனது பகுதியில் 40 மீட்டருக்கு ஒன்று உள்ளது. எழும்பூர், தி.நகர் போல் என் பகுதியில் உயர்தர விளக்குகள் அமைத்து வேண்டும். வைத்தியநாதன் பாலம் அருகில் மினி ஹை மாஸ் விளக்கு அமைத்து தர வேண்டும் வேண்டும் என கூறினார்.
மேயர் பிரியா: வடசென்னையில் வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உங்களது பகுதியில் புதிய எல்இடி விளக்குகள் போடப்படும். பழுதான விளக்குகள் மாற்றி தரப்படும். மற்ற இடங்களில் உள்ளது போல் பழுதுதான இடங்களில் உயர்தர விளக்குகள் அமைத்து தரப்படும்.
ராயபுரம் மண்டல குழு தலைவர் ராமுலு: துறைமுக பகுதியில் துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 11 மணி வரை கூட குப்பை எடுக்கப்படுவதில்லை என்றார்.
மண்டலக்குழு தலைவர் மதியழகன்: சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் அனுமதியின்றி கேபிள்கள் கட்டியுள்ளனர். நீண்ட நாட்களாக மாநகராட்சிக்கு எந்த பணமும் கட்டுவதில்லை என்றார்.

நேரமில்லா நேரத்தில் போது நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி பேசியதாவது:
டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதேபோல, நாங்கள் ஒவ்வொரு பணியை மேற்கொள்ளும் போது அதிகாரிகளிடமிருந்து பதில் சரியாக கிடைப்பதில்லை. பதில் வந்தால் தான் எங்களுடைய பணியை சிறப்பாக செய்ய முடியும்.
மேயர் பிரியா: ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களுடைய வார்டுகளில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நான் பலமுறை கூறியுள்ளேன். 2 கை சேர்ந்தால் மட்டுமே சத்தம் வரும். ஒருவர் மட்டுமே பிரச்னை குறித்து பேசும் போது எதுவும் மாறிவிடாது. கவுன்சிலர்களை ஊக்கப்படுத்தி தாங்களும் சேர்ந்து வேலை செய்யுங்கள்.
சங்கர் கணேஷ் (வார்டு 151): என்னுடைய வார்டில் உள்ள நகர்ப்புற அரசு ஆஸ்பத்திரியில் சரியான நேரத்திற்கு டாக்டர்கள் வருவதில்லை. நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதேபோல, எனது வார்டில் தெரு நாய்களால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
மேயர் பிரியா: சரியான நேரத்தில் பணிக்கு வராத டாக்டர்களுக்கு அபரதாம் விதிக்கலாம். தற்காலிக டாக்டர்கள் என்றால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க வேண்டும். இதேபோல, தெருநாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் அதே பகுதிகளில் விடுவது தான் விதி. அதை தான் பின்பற்றி வருகிறோம்.

கவுன்சிலர்களின் ஹெல்மெட்டில் எம்.சி. என எழுதலாமா? மாமன்றத்தில் சிரிப்பலை
தி.மு.க.வை சேர்ந்த 39வது வார்டு கவுன்சிலர் தேவி: எனது வார்டு பகுதிகளில் தினமும் நான் டூவீலரில் ஆய்வுக்கு செல்கிறேன். அப்படி டூவீலரில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்வதால், எங்கள் பகுதி மக்களால் என்னை அடையாளம் காண முடியவில்லை. எனவே, மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மட்டும் டூ-வீலரில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையைக் கேட்ட மேயர் பிரியா உள்பட அரங்கத்தில் இருந்த அத்தனை அதிகாரிகளும், மாமன்ற உறுப்பினர்களும் சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டு சிரித்தனர். இதனால் அரங்கமே சில நொடிகளுக்கு சிரிப்பலையால் மூழ்கியது. அப்போது, பல உறுப்பினர்கள் ஹெல்மெட்டில் எம்சி என எழுதிக் கொண்டு செல்லுங்கள் என கூறியவுடன் அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த மேயர் பிரியா: டூவீலரில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஹெல்மெட் அணிவது நம்முடைய பாதுகாப்புக்குத்தான். கவுன்சிலரே யானாலும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை மீறக்கூடாது. இந்த விஷயத்தில் விலக்கு அளிக்கவே முடியாது” என பதிலளித்தார்.

The post சென்னையில் கேட்பாரற்று திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் ₹10,000 ஆக உயர்வு: மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...