மலை கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் பயிலும் கீரிப்பாறை அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்யப்படுமா?

*மாணவ, மாணவிகள் சிரமம்

நாகர்கோவில் : குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட கீரிப்பாறையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. அரசு ரப்பர் தோட்டங்கள், தனியார் எஸ்டேட்டுகளில் பணியாற்றும் ஏழை கூலி தொழிலாளர்களின் குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். பின்னர் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் போனதால், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்தது. 40 ஆக குறைந்த எண்ணிக்கை, தற்போது அதற்கும் கீழ் சென்று விட்டது. இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

கழிவறையில் தண்ணீர் கிடையாது. கதவுகள் இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைகிறார்கள்.தண்ணீர் இல்லாத சமயத்தில் வீடுகளில் இருந்து வாளியில் தண்ணீர் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்த பள்ளி கட்டிடமும் சீரமைக்கப்பட வேண்டும். வனத்துறை பகுதிக்குள் இருப்பதால் செங்கல், மண் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது. சிறப்பு அனுமதி இருந்தால் மட்டுமே கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி, அரசு நடுநிலைப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக கழிவறை, குடிநீர் வசதியை போர்க்கால அடிப்படையில் செய்வதுடன், மழை காலத்துக்கு முன் உடைந்து கிடக்கும் மேற்கூரைகளையும் சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் கலெக்டரிடம் மனுவும் அளித்துள்ளனர்.

 

The post மலை கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் பயிலும் கீரிப்பாறை அரசு பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்யப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: