ஆரணி, செப்.27: ஆரணி அருகே சொத்திற்காக தந்தையை அடித்து கொன்ற மகனுக்கு கூடுதல் மாவட்ட அமர்வு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(70), விவசாயி. இவரது, மனைவி காளியம்மாள். இவர்களுக்கு மகன் வெங்கடேசன், மகள்கள் மீனா, மனோன்மணி, ரேகா, அஞ்சலா ஆகிய மகள்கள் உள்ளனர். மேலும், காளியம்மாளின் தாய் பவுனம்மாளுக்கு 2 மகள் உள்ளனர். அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில்,5 ஏக்கர் ஒரு மகளுக்கும், மீதமுள்ள 5 ஏக்கர், நிலம், வீடு உள்ளிட்டவைகளை காளியம்மாளின் மகன் வெங்கடேசன் பெயரில் கடந்த 1998ம் ஆண்டு உயில் எழுதி கொடுத்துள்ளார்.
அதன்பின்னர், வெங்கடேசனுக்கு திருமணம் நடந்த பிறகு, ஒரு டிராக்டர் வாங்கி நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அப்போது, விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், டிராக்டருக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாதால், அவரது மாமியார் வீட்டிற்கு அவரது குடும்பத்துடன் சென்று வசித்து வந்துள்ளார். மேலும், தனது பெயரில் இருந்த 5 ஏக்கர் சொத்தை அவரது தந்தைக்கு தெரியாமல் வெங்கடேசன் தனது மகன் சேஷாத்திரி பெயரில் உயில் எழுதி, சொத்துக்கு காடியனாக அவரது மனைவி பெயரை போட்டு சொத்தை மாற்றி எழுதி வைத்துள்ளார். பின்னர், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான சாணார்பாளைம் கிராமத்திற்கு தனது குடும்பத்துடன் வந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது, வெங்கடேசன் சொத்தை மகன் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ள தகவல் அவரது தந்தை பெருமாளுக்கு தெரிந்துள்ளது. இதனால், வெங்கடேசனிடம் உனது பாட்டி சொத்தை உன் அக்கா, தங்கைகளுக்கு பிரித்து கொடுக்காமல் மொத்த சொத்தையும் உன் மகன் பெயரில் எப்படி எழுதி வைக்கலாம் என பெருமாள் கேட்டுள்ளார். பின்னர், சொத்துக்களை தனது மக்களுக்கு பாகம் பிரித்து கொடுக்க வேண்டும் என கேட்டு, சொத்தை எழுதி கொடுக்கும்படி பெருமாள் கேட்டு வந்துள்ளார். இதனால், சில ஆண்டுகளாக தந்தை மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதேபோல், கடந்த 11.04.2013ம் தேதி அன்று பெருமாள் சேவூர் பகுதியில் தவிடு அரைக்கும் மில்லுக்கு வேலைக்கு சென்று வேலையை முடித்துவிட்டு, மதியம் வீட்டிற்கு வந்து வெளியில் உள்ள திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது, வீட்டிற்கு வந்த வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு, தனது தந்தை பெருமாள் மீது இருந்த முன்விரோதம் காரணமாக அவரை கையால் அடித்து சமரமாரியாக தாக்கியுள்ளார். மயங்கி கிழே விழுந்த அவரை தரதரவென்று வீட்டிற்குள் இழுத்து சென்று, தலைகானியை முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் பெருமாள் பிரேதத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தாலுகா போலீசில் பெருமாள் மருமகன் குப்பன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணை ஆரணியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை நடைப்பெற்று வந்தது. அதன்படி அந்த வழக்கு விசாரனை நேற்று மாவட்ட அமர்வு நீதிபதி கே.விஜயா முன்னிலையில் நடந்தது. அப்போது அந்த வழக்கின் தரப்புவாதத்தை அரசு வழக்கறிஞர் கே.ராஜமூர்த்தி வாதிட்டார். அப்போது, இருதரப்புவாதங்களை கேட்ட மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா விசாரித்து, பெருமாளை அடித்து கொலை செய்த, குற்றத்திற்காக வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும், தலா ₹2 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால், மேலும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
The post சொத்திற்காக தந்தையை அடித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை கூடுதல் மாவட்ட அமர்வு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு ஆரணி அருகே appeared first on Dinakaran.