எடப்பாடி டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தும், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘‘இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என கடந்த ஜூலை 18ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதா ரூ.4.800கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

The post எடப்பாடி டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: