×

ஷவர்மா, பாஸ்ட் புட் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை சமைப்பதே உயிரிழப்புக்கு காரணம்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்


ஷவர்மா, பாஸ்ட் புட் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை சமைப்பதே உயிரிழப்பு போன்ற பாதிப்புகளுக்கு காரணம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வீட்டில் செய்யப்படும் தின் பண்டங்களான முறுக்கு, அதிரசம், கடலை, கடலை மிட்டாய் மற்றும் நன்றாக வேக வைக்கப்பட்ட உணவு வகைகளை வழங்குவது ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. நாளடைவில் வீடுகளில் செய்யப்படும் உணவு பொருட்களை தவிர்த்து கடைகளில் செய்யப்படும் எண்ணெய் பொருட்களை வாங்கி கொடுப்பது வழக்கமாகி விட்டது. இதனால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

மேலும் வீட்டில் சமைப்பதை தவிர்த்து ஓட்டல்களில் அவசரமாக தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவுகள் மீது மக்களின் ஆர்வம் அதிரிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மக்கள் சாப்பிடும் உணவுகளில் இன்று ஷவர்மா முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. வடை, பஜ்ஜி, காளான், காலிபிளவர், பாணி பூரி என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்கள், தற்போது அதிகம் ஷவர்மாவை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுகின்றனர். ஷவர்மா என்பது மத்திய கிழக்கு நாடுகளின் உணவாகும். 19ம் நூற்றாண்டு காலத்தில் துருக்கியில் அறிமுகமானது. இது, இந்தியாவில் முதன்முதலில் ஐதராபாத் மற்றும் கேரள மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிக்கன் ஷவர்மா, பீப் ஷவர்மா, போர்க் ஷவர்மா, வெஜிடபிள் ஷவர்மா என 20க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதிலும் மெக்சிகன் ஷவர்மா, ஸ்வீட் சில்லி ஷவர்மா, லாங் ஷவர்மா என சுவைக்கு ஏற்ப வகைகளும் உள்ளன.

மேலும் ஆடு, மாட்டிறைச்சியை வேக வைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். கோழி இறைச்சியை சிறிது நேரத்தில் சமைக்க முடியும். அதிலிருந்து தயாரிக்கப்படும் ஷவர்மா முறையாக வேக வைக்கப்படாமல், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான உணவாக மாறுகிறது. அதே சமயம் ஷவர்மா சாப்பிடுபவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகக் கொண்டிருக்கும் நேரத்தில் ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாக மாறி வருகிறது. கேரளத்தில் 2022ல் ஷவர்மாவால் உயிரிழப்பு ஏற்பட்டபோது, அதற்கு காரணமான ஷவர்மா மாதிரிகளில் ஷிகெல்லா, சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இருந்ததை கேரள சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவே இறப்புக்கு காரணம் என்றும் தெரிவித்தது.  இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் உணவகம் ஒன்றில், கடந்த 16ம் தேதி ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் உணவகத்தில் 20ம் தேதி இரவு 150 பேருக்கு சிக்கன் ரைஸ் வாங்கி செல்லப்பட்டது. அதை சாப்பிட்ட வடமாநிலத்தவர் 26 பேருக்கு உடல்நிலை பாதிப்பு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் ஒரே நாளில், 1,187 கடைகளில் நடந்த சோதனையில், தரமற்ற இறைச்சி வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ேமலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவர் பூபதி ஜான் கூறியதாவது: நன்றாக வேக வைக்கப்படாத அல்லது பழைய இறைச்சி, எளிதில் கெட்டுப்போகக் கூடிய மயோனைஸ், காலாவதியான சாஸ் ஆகியவை இந்த பாக்டீரியா உருவாக காரணமாக இருக்கலாம். மேலும் இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவது, ஷவர்மா தயாரிக்கும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த ஷிகெல்லா பாக்டீரியா காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா வயிற்றுக்குள் செல்லும்போது சிறுகுடலில் தொற்றை ஏற்படுத்தி பெருங்குடலுக்கும் பரவுகிறது. இதனால் வயிற்றுப்போக்குடன், காய்ச்சல், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வியர்வை, தலைவலி, செரிமான பிரச்னைகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புப் பிரச்னை, சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்படலாம்.

கர்ப்பிணிகள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறினார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் கூறியதாவது: உணவுகளை சரியாக சமைக்காததே இவ்வாறான பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது. குறிப்பாக, ஷவர்மா பாதி வேக வைத்து சாப்பிடும் போது பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் ஓட்டல்களில் சரியாக சமைக்காமல், உணவு பொருட்களை முறையாக கையாளுவது மற்றும் முறையாக பராமரிக்க முடியாமலும் போகும் போது பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்காக தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மையோனஸ் என்பது 2 மணி நேரத்தில் கெட்டு போகக்கூடிய பொருள். இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலும் சிக்கன் உணவில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம், அதனை சரியாக வேக வைக்காதது தான் முக்கிய காரணம். கூடிய வரை குழம்பாக சாப்பிடும் போது நல்லது. மேலும் தரமற்ற உணவுகளை வழங்கும் ஓட்டல்கள் மீது கிரிமனல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஒரு நாளுக்குள் அசைவ பொருட்களை வைத்து பயன்படுத்துவது நல்லது. ஒரு நாளுக்கு மேல் உள்ள சிக்கன், மட்டன், மீன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். சென்னையில் மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, அரும்பாக்கம் போன்ற இடங்களில் அதிகளவில் இதுபோன்ற தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு மாம்பலம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் 300 கிலோவிற்கு அதிகமான சிக்கன், அரிசி, வெங்காயம், மீன் சாய மேற்றப்பட்ட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தரமற்ற உணவுகளை வழங்கும் ஓட்டல்கள் குறித்து பொதுமக்கள் நேரடியாக புகார்களை அளிக்கலாம். இதற்காக தனியாக ஆப் உள்ளது. மேலும் foodsafety.tn.gov.in என்ற இணையதளத்திலும், 94440 42322 என்ற வாட்சப் எண்ணிற்கும் புகார்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

*எப்படி பரவுகிறது
ஷிகெல்லா பாக்டீரியா உலகம் முழுவதுமே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண்டுக்கு 18 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்பதை தரவுகள் சொல்கிறது. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர், கழிப்பிடம் மூலம் இந்த பாக்டீரியா பரவுகிறது. இந்த பாக்டீரியா உள்ள பொருட்களை தொடும் போதோ அல்லது பாக்டீரியா உள்ள உணவுகளை சாப்பிடும் போதோ இது பரவும். மேலும் ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலமாகவும் பரவலாம்.

அதிக வெப்பநிலையில் வைத்து உணவு சமைக்க வேண்டும். குறைந்தது 75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சிக்கனை சமைக்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், உணவு பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். வயிற்றுப்போக்கு இருப்பவர்கள் சமைக்க கூடாது. பாஸ்ட் புட் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது. வெளிநாட்டில் இட்லி, கூட்டு, பொரியல் அனைத்தும் நல்லது என கூறி வரும் நிலையில் நமது அடுத்த தலைமுறை, பாரம்பரிய உணவுகளை மறந்து உடலுக்கு பாதிப்புகளை ஏற்படும் உணவுகளை தேடி சாப்பிடுகின்றனர்.

*காசியா பட்டையால் பாதிப்பு
உணவுகளில் சுவைக்காக சுருள் பட்டை சேர்க்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவ குணம் மிகுந்த சுருள் பட்டையின் விலை அதிகமாக உள்ளதால், அதே மனமும் சுவையும் உள்ள காசியா பட்டை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் காசியா பட்டையை பயன்படுத்துவதன் மூலம் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே காசியா பட்டையை பயன்படுத்தக்கூடாது என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும் உணவகங்களில் பலர் குறைந்த விலைக்கு கிடைக்கும் காசியா பட்டையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் இதுகுறித்தும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

*தொடர்ந்து துரித உணவா? புற்றுநோய் வர வாய்ப்பு: டாக்டர்கள் எச்சரிக்கை
தொடர்ந்து துரித உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: பாஸ்ட் புட் கடைகளில் தரமற்ற முறையில் பிரைட் ரைஸ், ஷவர்மா, கோழி இறைச்சியில் பல்வேறு துரித உணவுகளான தந்தூரி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது, பல நிறங்களில் எண்ணெய் ஊற்றுவது, அஜினமோட்டோ பயன்படுத்துவது போன்றவற்றால் உடல் உறுப்புகள் பாதிப்படையும். சாண்ட்விச், பர்கர், பீட்சா, பொரித்த சிக்கன், பிரெஞ்ச் ப்ரை, ஆனியன் ரிங், ஷவர்மா, பதப்படுத்தப்பட்ட மாவுகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் மேற்கத்திய நாடுகளில் இருந்து தோன்றி நமது நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டவையாகும். இவை நாவிற்கு சுவையாக இருந்தாலும், உடலுக்கு உகந்தது கிடையாது.

இதுபோன்ற பாஸ்ட் புட் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் பாதிப்பு அபாயமும் உள்ளது. துரித உணவுகளால் குழந்தைகளின் உடல் எடை அதிகரித்து, மந்தமாக காணப்படுவார்கள். தைராய்டு, கல்லீரல் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து ஆபத்தான உணவுகளை வாங்கிவிடுகிறோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதோடு, மாரடைப்பு போன்றவற்றாலும் சிலர் உயிரிழக்கின்றனர்.

உணவு என்பது நாம் ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கு தேவையானது. அத்தகைய உணவில் அலட்சியம் காட்டாமல் அனைவரும் அக்கறையுடன் செயல்படுவது அவசியம். முடிந்தவரை வீட்டில் சமைத்த ஆரோக்கியமான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். தேவைப்பட்டால் கடைகளிலும் இயற்கையான உணவுகளை வாங்கலாம். காய்கறிகள், கீரை வகைகள், மீன், பால், முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் பழங்களையும் சாப்பிடுவதோடு, தினமும் உடற்பயிற்சி, யோகா செய்வதால் ஆரோக்கியமாக வாழ முடியும். புகைப்பழக்கம் மட்டுமின்றி, மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் பழக்கத்தை தவிர்ப்பதும் அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஷவர்மா, பாஸ்ட் புட் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை சமைப்பதே உயிரிழப்புக்கு காரணம்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,
× RELATED தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற...