×

பசுமை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி சரவெடி வெடிக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பேரியம் கலந்த பட்டாசு மற்றும் சர வெடிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதே நேரம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை தயாரிக்க நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில்,\\”குறிப்பாக பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். அதனை மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நேரத்தில் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம். மேலும் இந்த கால நேரம் என்பது தீபாவளி உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை அதே ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் டெல்லியில் அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமை பட்டாசு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தீபாவளி பண்டிகையின் போது உச்ச நீதிமன்றம் முன்னதாக நிர்ணயம் செய்துள்ள கால நேரத்தின் அளவை கூடுதலாக அதிகரிக்க வேண்டும். அப்போது தான் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் ஆகியோருக்கும் லாபம் ஈட்டும் விதமாக இருக்கும். குறிப்பாக நாள் ஒன்று இரண்டு மணி நேரம் என்பதை திருத்தி காலை 4மணி நேரம், அதேப்போன்று மாலை 4மணி நேரம் என ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அதே போல், சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் மாசு அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்டாசு உற்பத்தி மற்றும் வெடிக்க தடை விதிக்க வேண்டும் என அர்ஜூன் கோபால் என்பவர் தரப்பிலும், பேரியம் இல்லாத பசுமை பட்டாசை பயன்படுத்த வேண்டும்.

இதனை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் என்பவர் தரப்பிலும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்திவைத்து இருந்தது. இந்நிலையில், பட்டாசு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில்,‘‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை பட்டாசுகளை தயாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.

அதேவேலையில் பேரியம் கலந்த பட்டாசுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் அதிக சத்தத்துடன் வெடிக்க கூடிய சரவெடிகளும் தடை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் பேரியம் கலந்த பட்டாசு மற்றும் சரவெடி ஆகியவைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற மனுவை ஏற்க முடியாது என்பதால் அதனை நிராகரித்து தள்ளுபடி செய்கிறோம். அதே போன்று, பட்டாசு வெடிக்கும் கால நேரம் உட்பட கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவில் என்னென்ன கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் கொடுக்கப்பட்டதோ அவை அனைத்தும் தொடரும்.

இருப்பினும் தலைநகர் டெல்லியை பொருத்தமட்டில் வரும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அது அவர்களின் கொள்கை சார்ந்த ஒன்று என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தீர்ப்பளித்த நீதிபதிகள்,\\” பட்டாசு தொடர்பான பிரதான வழக்கை தவிர மீதமுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர். இதில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

The post பசுமை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி சரவெடி வெடிக்க தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்...