×

ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் பெரம்பூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பூரில் ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நேற்று பெரம்பூர் லோகோ பணிமனை முன்பு எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து லோகோ மெக்கானிக்கல் கிளை பொருளாளர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று நேற்று மதியம் பெரம்பூர் கேரேஜ் பணிமனை முன்பு கருணாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த 2 கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் எஸ்ஆர்இஎஸ் தொழிற்சங்கத்தின் ஜோனல் நிர்வாகத் தலைவர் சூரிய பிரகாஷ், இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் பணிமனை கோட்ட உதவி செயலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு தான்தோன்றி தனமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் ரயில்வே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே ரயில்வே துறையை காக்க மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். ரயில்வே துறையை படிபடியாக தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் இதில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

The post ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் பெரம்பூரில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Railway unions ,Perampur ,Union government ,Perambur ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை...