துளசி ஒரு மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இது அதிகம் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக்கூடிய இச்செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயில் பூஜைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயில் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து வணங்கும் வழக்கமும் உண்டு. நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, காட்டுத் துளசி என பல வகை துளசிகள் உள்ளன.
நம் உடலில் ஏற்படும் பல நோய்களை தீர்க்கும் மருந்தாக துளசி உள்ளது. துளசியின் மகிமை ஏராளம் என்பதால் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. துளசியில் நல்ல சாறு இருப்பதால் ‘சரஸா’ என்றும், பல இலைகளை கொத்தாகக் கொண்டதால் ‘பகுபத்திரி’ எனவும், மலர்கள் கொத்துகளாக இருப்பதால் ‘பகு மஞ்சரி’ எனவும், எளிதில் கிடைப்பதால் ‘தலபா’ எனவும் வட மொழியில் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது என்பதால் ‘விஷ்ணு வல்லபா’ என்றும் அழைக்கப்படுகிறது. தமிழில் துளசியினை திருத்துஷாய், துளஷ, கிருஷ்ண துளசி, இராம துளசி எனவும் அழைப்பர். இப்படி பல பெயர்களால் அழைக்கப்பெறும் துளசி, சிறப்பான மருத்துவப் பயன்களை கொண்டது.
*முக்கியமாக நமது மூளை சோர்வடையும் போது, புத்துணர்ச்சி தரக்கூடியது. பத்து துளசி இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு காய்ச்சி, இரண்டு ஏலக்காய், இரண்டு டீஸ்பூன் தேன், சிறிதளவு பசும் பால் கலந்து பருகினால் மூளை சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும்.
*துளசியை குடிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதாலும், குடிப்பதாலும் தொண்டைவலி, அழற்சி, புண் போன்றவை நீங்கும். மேலும் ‘டான்சிலை’யும் கரைக்கும் தன்மை கொண்டது.
*துளசி ஊறவைத்த தண்ணீரைப் பருகுவதால் இருமல், இளைப்பு, காசநோய், காய்ச்சல் இவைகளையும் தீர்க்க வல்லது.
*ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் அளவு துளசி விதைகளை போட்டு ஊறவைத்து, அந்த நீரை குடித்து, விதைகளை மென்று சாப்பிட வயிறு சம்பந்த தொல்லைகள் தீரும்.
*சுடுதண்ணீரில் ஒரு தேக்கரண்டி துளசி இலைச் சாறு, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, குமட்டல் போன்றவை குணமாகும்.இப்படி பல நோய்களை குணப்படுத்தும் துளசியை பயன்படுத்தி பலவித நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.
– அ.திவ்யா, காஞ்சிபுரம்.
The post மூளைக்கு புத்துணர்ச்சி தரும் துளசி appeared first on Dinakaran.