×

தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலை அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்ற உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தனது குடிசைகளில் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை விற்பனை செய்யவிடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிடக் கோரியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனைக்கு தடை விதிக்க முடியாது. அதே வேளையில் இந்த சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டார்.

இதையடுத்து இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு,‘‘இந்த விவகாரத்தில் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, ஏற்கெனவே பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை ஏன் பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பி ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கலப்பதால் புற்றுநோய் ஏற்படுவதாகவும், விஷம் என்பது ஒரு துளி விஷம் அதிக விஷம் என்று கணக்கு கிடையாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,‘‘ கடன் வாங்கி சிலைகளை செய்துள்ளேன். அதனை விற்க முடியவில்லை என்றால் வாழ்வாதாரம் பாதிக்கும்’’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன்,‘‘எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்து செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு அனுமதி கிடையாது. அது சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்கவும் முடியாது’’ என தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலை அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu government ,Paris ,New Delhi ,
× RELATED தற்கொலை அதிகரிப்பால் தான் ஆன்லைன்...