×

கேரள முதல்வர், மகளுக்கு எதிராக புகார் கொடுத்தவர் மர்ம மரணம்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தாது மணல் நிறுவனத்திடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கிய விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் கொச்சியில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியிலுள்ள களமசேரி பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்பாபு (47). பொது சேவகரான இவர், கேரளாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஊழல் மற்றும் பொதுநலன் வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஒரு தாதுமணல் நிறுவனத்திடமிருந்து முதல்வர் பினராயி விஜயன், மகள் வீணா விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முஸ்லிம் லீக் தலைவர் குஞ்ஞாலிக் குட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இந்த விவகாரம் வெளியே வந்தது. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தக் கோரி கிரீஷ்பாபு மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிரீஷ்பாபு வழக்கம் போல வீட்டில் தூங்கினார். இவரது மனைவி வேறு ஒரு அறையில் தூங்கினார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் கிரீஷ்பாபுவின் அறை திறக்கப்பட வில்லை. அவரது மனைவி பலமுறை தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவரது மனைவி பக்கத்து வீட்டினரை அழைத்து கதவை உடைத்து திறந்து பார்த்த போது கிரீஷ் பாபு படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து களமசேரி போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கிரீஷ் பாபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மர்ம சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பினராயி விஜயன், அவரது மகள் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர் மர்மமான முறையில் இறந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கிரீஷ் பாபு கேரள உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மரணமடைந்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை 2 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

The post கேரள முதல்வர், மகளுக்கு எதிராக புகார் கொடுத்தவர் மர்ம மரணம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,Pinarayi Vijayan ,Veena Vijayan ,Thadu Sandal ,
× RELATED கேரளாவில் தனது வீட்டில் திருடிய...