×

அமெரிக்கா செல்ல விவாகரத்தான பெண்ணுக்கு அனுமதி மகளை மாஜி கணவன் சந்திக்க அனுமதிக்காவிட்டால் சொத்தில் பங்கு கிடைக்காது: மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் தனது மைனர் மகளுடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த பின், மாஜி கணவருக்கு மகளை சந்திக்க அனுமதி மறுத்தால் சொத்தில் அவரது பங்கை இழக்க நேரிடும் என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புனேவில் வசித்து வரும் தம்பதி கடந்த 2020-ம் ஆண்டில் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் மைனர் மகள் யாரிடம் இருப்பது என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. புனேவில் உள்ள குடும்ப நீதிமன்றம் குழந்தையை தாயிடம் ஒப்படைத்ததுடன், குழந்தையை பார்க்க தந்தையை அனுமதிக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்று தந்தை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், மைனர் மகளுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி அப்பெண் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தகராறுகளை மத்தியஸ்தம் செய்து தீர்த்து கொள்ளும்படி தம்பதிக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து தம்பதியினர் உயர்நீதிமன்றத்தில் தங்களது சம்மதத்தை தாக்கல் செய்தனர். அதில் மகள் தாயுடன் அமெரிக்கா செல்ல கணவர் சம்மதித்ததாகவும், வீடியோ கால் மற்றும் நேரடியாக மகளை பார்க்க மனைவி ஒப்பு கொண்டதாகவும் கணவர் மீது தொடர்ந்த சில கிரிமினல் வழக்குகளை மனைவி வாபஸ் பெறுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், மனைவி இந்திய நீதிமன்ற அதிகார வரம்புக்கு வெளியே சென்று விடுவதால், மகளை அணுகுவதற்கான ஒப்புதல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கணவர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த ஒப்புதல் விதிகளை மனைவி மீறினால், புனேவில் இருவரும் சேர்ந்து வாங்கிய பிளாட்டில் மனைவிக்கு இருக்கும் 50 சதவீத பங்கை அவர் இழக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐகோர்ட்டே வக்கீல் ஆணையரை நியமித்து, அந்த பெண்ணின் பங்கை மாஜி கணவருக்கு முறைப்படி எழுதி தர ஏற்பாடு செய்யும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

The post அமெரிக்கா செல்ல விவாகரத்தான பெண்ணுக்கு அனுமதி மகளை மாஜி கணவன் சந்திக்க அனுமதிக்காவிட்டால் சொத்தில் பங்கு கிடைக்காது: மும்பை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : United States ,Maji ,Mumbai ,USA ,Dinakaran ,
× RELATED வாஷிங்டனில் போலீஸ் கார் மோதி...