×

சின்ன வெங்காய சாகுபடியில் அசத்தும் பெரம்பலூர்: ஆண்டுக்கு 80,000 மெட்ரிக் டன் மகசூல்; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி; போதிய விலை கிடைக்காததால் அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

வெங்காயம்- இந்த வார்த்தை பல்வேறு கால கட்டங்களில் பேசுபொருளாக மாறியதை நாடே அறியும். இந்தியாவை பொறுத்தவரை வெங்காயம் உணவில் இன்றியமையாத பொருளாக இருக்கிறது. பெரும்பாலான இந்தியர்கள் வெங்காயத்தை பயன்படுத்துபவர்களே! அதிலும் சின்ன வெங்காயம், தென்னிந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்து அதிர வைத்தது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு 5 லட்சத்து 53 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. 3 மாத பயிரான சின்ன வெங்காயம் பருவ நிலைக்கு ஏற்ப சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தை பொறுத்தவரை 17 ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுதான் அதிகமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆற்றுப்பாசனமே இல்லை எனலாம். பருவ மழைக்காலங்களில் மட்டுமே சில ஆறுகளில் சில மாதம் மட்டும் தண்ணீர் வரத்து இருக்கும். மற்றபடி பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி பூமியாகும். கிணற்று பாசனத்தை நம்பியே பயிர் சாகுபடி இங்கு நடைபெறுகிறது. இங்கு சராசரியாக ஏக்கருக்கு 4 ஆயிரம் கிலோ வெங்காயம் மகசூல் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுக்கு 80 ஆயிரம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயம் இம்மாவட்டத்தில் மட்டும் விளைவிக்கப்படுகிறது. இதுதான் தமிழகத்திலேயே அதிகம்.

இங்கிருந்து நாடு முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் சரியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் இவற்றை சேமிக்க வழியில்லாததால் உடனுக்குடன் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை நிலவுகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு சின்ன வெங்காயத்தை வாங்கும் வியாபாரிகள், அதனை சுத்தப்படுத்தி பேக்கிங் செய்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் போதிய விலை கிடைக்காததால் வேதனையடைந்த வியாபாரிகள் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம் வெங்காயம் விளையும் ஆலத்தூர் தாலுக்காவில், தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50ஆயிரம் மெட்ரிக் டன் சேமிக்கும் அளவிற்கு குளிர்சாதன வசதியுடன் சின்ன வெங்காய சேமிப்பு கிடங்கு, ஏல மையத்துடன் ரூ.1.14 கோடி செலவில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் சின்ன வெங்காயத்தை ஏல மையத்திற்கு கொண்டு செல்லும் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்காததால், அடுத்த ஓராண்டில் அனைவருமே வெங்காயம் கொண்டு செல்வதை அடியோடு நிறுத்தி கொண்டதோடு பழையபடி தங்கள் வயல்களில் பட்டறை அமைத்து பாதுகாக்கும் பாரம்பரிய முறைகளையே பின்பற்ற தொடங்கினர்.

பொதுவாகவே விவசாய விளை பொருட்களுக்கு விவசாயிகள் விலை நிர்ணயிக்க முடியாத நிலைதான் நாடு முழுவதும் நிலவுகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டம் விதிவிலக்கல்ல. பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 100 நாள் வேலை திட்டத்திற்கு பெரும்பாலான விவசாய கூலித்தொழிலாளிகள் சென்று விடுவதால், அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை ஆய்வதற்கு கூட ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் வியாபாரிகள் சிலர், வெங்காயம் அறுவடையாகும் வயலுக்கே சென்று ஆயாமல் உள்ள வெங்காயத்தை அடிமாட்டு விலைக்கு குறைத்துப்பேசி வாகனங்களில் ஏற்றி வந்து தாங்கள் அமைத்துள்ள கீற்றுக் கொட்டகைகளில் மலைபோல் குவித்து வைத்து விளக்கொளியில் இரவு பகலாக ஆயச்செய்து அதில் தரமான சின்ன வெங்காயத்தை திருச்சி மண்டிக்கும், திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தைக்கும், அருகிலுள்ள சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

சின்ன வெங்காய உற்பத்தியில் மாநில அளவில் முதலிடத்தில் இருந்தும் உரிய விலை இல்லை என்ற புகாரையடுத்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக்கும் நோக்கில் தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.69 லட்சம் செலவில், பொது உணவு பதப்படுத்தும் மையத்தை கடந்த 2017 ஆகஸ்டில் ஒன்றிய அரசு திறந்தது. இந்த மையத்தை திறந்து வைத்ததோடு சரி, அதிகாரிகள்கூட மறுமுறை வந்து பார்க்கவே இல்லை. இதனால் திறப்பு விழா நாளுக்கு பிறகு இதுவரை மையம் திறக்கப்படாமலேயே உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், பூலாம்பாடி, அகரம்சிகூர், வடக்கலூர் போன்ற இடங்களில் அறுவடை சீசனுக்குமட்டும் ஆண்டுதோறும் அரசே நெல்லை கொள்முதல் செய்வதுபோல், வெங்காயம் விலைவீழ்ச்சி காணாம
லிருக்க பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தையும் அரசே நேரடியாக கொள்முதல் நிலையங்கள் அமைத்து தரத்துக்கு ஏற்றபடி உரிய விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். அதனை நுகர்வோர் பயன்பாட்டிற்காக நிரந்தரமாக நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

* டன் கணக்கில் திருட்டு
வயல் வெளிகளில் பட்டறை அமைத்து பாதுகாக்கப்பட்ட சின்ன வெங்காயம், டன் கணக்கில் மூட்டை மூட்டையாக திருட்டு போவது அதிகரித்தது. இதனால் சில விவசாயிகள் பட்டறை கட்டியும், கொட்டகைகளில் வைக்கவும் அஞ்சி, வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விற்க வேண்டிய நிலை உருவாகிறது.

* அடிப்படை தெரியாத ஒன்றிய அதிகாரிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காத சூழலிலும், விலை வீழ்ச்சி அடைந்த சமயங்களிலும் பாரம்பரிய வழக்கப்படி பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை பாதுகாத்து வருகின்றனர். வெட்ட வெளியில், கிணற்றோரம் வயல்களில் அமைக்கும் இந்த பட்டறையில் குறைந்தது 3 மாதம் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க முடியும். வெப்பத்தின் காரணமாக பட்டறை வெங்காயம் சூடேறினால், அதனை கலைத்து மீண்டும் பட்டறை கட்டி வைப்பது வழக்கம். ஆனால் இதுகுறித்த புரிதல் இல்லாத ஒன்றிய அரசின் தேசிய தோட்டகலை இயக்கம், 50 சதவீத மானியத்தில் 25 மெட்ரிக் டன் வெங்காயத்தை பாதுகாக்ககூடிய வெங்காய கொட்டகைகள் தகரத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

ஆண்டு வாரியாக சாகுபடி
ஆண்டு வெங்காய சாகுபடி
2013-14 13,044.07 ஏக்கர்
2014-15 15,867.28 ஏக்கர்
2015-16 22,017.58 ஏக்கர்
2016-17 18,566.99 ஏக்கர்
2017-18 16,625.57 ஏக்கர்
2018-19 17,406.09 ஏக்கர்
2019-20 17,255.42 ஏக்கர்
2020-21 23,600.85 ஏக்கர்,
2021-22 20,392.32 ஏக்கர்
2022-23 19,537.7 ஏக்கர்

The post சின்ன வெங்காய சாகுபடியில் அசத்தும் பெரம்பலூர்: ஆண்டுக்கு 80,000 மெட்ரிக் டன் மகசூல்; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி; போதிய விலை கிடைக்காததால் அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Dinakaran ,
× RELATED டெல்லியில் வரும் 19ம் தேதி இந்தியா...