×

கொளத்தூர், மாதவரம் பகுதியில் ₹141.85 கோடியில் வடிகால், ஏரி தூர்வாரும் பணிகள்: நீர்வளத்துறை செயலாளர் ஆய்வு

திருவொற்றியூர், செப்.16: கொளத்தூர், தணிகாசலம் நகர், மாதவரம் ரெட்டேரி போன்ற பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் ₹141.85 கோடி செலவில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய், ஏரி தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில், மாதவரம் தணிகாசலம் நகரில் ₹91.36 கோடி செலவில் 3050 மீட்டர் நீளத்திற்கு புதிய மழைநீர் கால்வாய் கட்டுதல், கொளத்தூர் ஏரியை ₹7.30 கோடி செலவில் கரை மற்றும் நடைபாதை அமைத்தல், மாதவரத்தில் உள்ள ரெட்டேரி ஏரியை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைப்பது, 3 மண் திட்டுக்கள் அமைத்தல், நடைபாதை மற்றும் கைப்பிடி அமைத்தல் என ₹141.85 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன் விரைவாக முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ₹141.85 கோடி செலவில், மாதவரம் தணிகாசலம் நகரில் மழைநீர் கால்வாய் கட்டும் பணி, கொளத்தூர் ஏரியில் நடைபாதை அமைக்கும் பணி, மாதவரம் ரெட்டேரி ஏரியை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கொளத்தூர் ஏரி, தணிகாசலம் நகர் மழைநீர் கால்வாய், மாதவரம் ரெட்டேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.மேலும் பணியை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நிர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, தலைமை பொறியாளர் அசோகன், சிறப்பு தலைமை பொறியாளர் கண்ணன், செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கொளத்தூர், மாதவரம் பகுதியில் ₹141.85 கோடியில் வடிகால், ஏரி தூர்வாரும் பணிகள்: நீர்வளத்துறை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Madhavaram ,Water Resources ,Thiruvottiyur ,Thanikasalam Nagar ,Madhavaram Rederi ,
× RELATED மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த...