×

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை; 5 மாதத்தில் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது தாமிரபரணி ஆற்று படுக்கையில் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெறுவதாக முறப்பநாடு காவல் நிலையத்தில் லூர்து பிரான்சிஸ் புகார் தெரிவித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மணற்கொள்ளையர்கள், கடந்த ஏப்ரல் 25ம் தேதி லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினரான மாரிமுத்து ஆகிய இருவரையும் அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு தமிழக முதல்வரால் 1 கோடி ரூபாய் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மே 25ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2 மாதத்தில் வழக்கை முடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம், மணல் கொள்ளையடிக்கப்பட்ட ஆற்று படுக்கைகள் போன்ற இடங்களை ஆய்வு செய்து மொத்தம் 52 சாட்சியங்களை கண்டறிந்தார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், இரும்பு லாடு போன்ற 13 ஆயுதங்கள் குறியீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், மணல் கொள்ளையர்கள் ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கில் ராமசுப்பு, மாரிமுத்துவுக்கு ரூ.3000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வி.ஏ.ஓ. கொலை வழக்கில் ஐந்தே மாதங்களில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை; 5 மாதத்தில் அதிரடி தீர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi District Tharapnadu ,Lurde Francis ,Thoothukudi ,Lurdu Francis ,Tutukudi ,Thoothukudi District Pathapnadu ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...