×

ரூ.1000 கிரெடிட்… கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கும் பெண்கள்!!

சென்னை: வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கீகரிக்கும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்கினார். இத்திட்டத்தில் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பேர் பயனடைகின்றனர். அதே நேரத்தில் வங்கிகள் மூலம் நேற்று முதல் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருவதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களின் வீட்டு வேலையை உழைப்பாக கருதி அதனை அங்கீகரிக்கும் வகையில் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த இந்த திட்டத்துக்கு, ‘‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். இத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவித்தார். இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை, அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் உரிய பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கினர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 21ம் தேதி விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விண்ணப்ப பதிவு முகாமை தொடங்கி வைத்தார். 2 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்ப பதிவு நடந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 23ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடந்தது. ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்யப்பட்டது. தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமல் கவனமுடன் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திட்டத்திற்கு மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்தன.

ஆய்வில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வங்கிகள் மூலமாக பணம் வழங்குவது என்பது முடியாத காரியம். ஒரே நேரத்தில் வங்கிகள் மூலமாக பணம் அனுப்பினால் தொழில்நுட்ப கோளாறுகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. இது போன்ற குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. முதல் கட்டமாக விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் மற்றும் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கையேடு வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் அடையாளமாக சில பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து அவர் சிறப்புரையாற்ற உள்ளனர். இதேபோல மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொங்கி வைக்கின்றனர். இந்நிலையில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் நேற்று பிற்பகல் முதல் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது.

The post ரூ.1000 கிரெடிட்… கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கும் பெண்கள்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED அனைத்து விதமான பேரிடர்களை திறம்பட...