
டெல்லி : தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதில் இருந்து உற்பத்தி ஆகும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரே மாதத்தில் 230 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
5 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருப்பவர்களுக்கு எலிசா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். மருத்துவமனைகளில் போதிய ரத்த இருப்பை உறுதி செய்வதுடன் கூடுதல் ரத்த தான முகாம்களை அமைத்து அனைத்து ரத்த வகைகளையும் சேகரித்து வைக்கவும் ககன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார். ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க திறந்த வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்தி, கொசு உற்பத்தி ஆகாத வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே இன்புளுவென்சா காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
The post 5 நாட்களுக்கும் மேல் கடுமையான காய்ச்சல் இருந்தால் எலிசா பரிசோதனை கட்டாயம் : சுகாதாரத்துறை உத்தரவு!! appeared first on Dinakaran.