×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

சமூகக் கோட்பாடுகள் vs உளவியல் ஆலோசனை!

அனுபவத்துக்கும், கோட்பாட்டுக்கும் இடையேயான உறவு, குறிப்பாக அறிவியல் துறைகளிலும் ஒரு முறைமையோடு சிந்திக்கும் துறைகளிலும் எப்போதும் சிக்கலானதாகவே உள்ளது‘‘கறாராகக் கூறுவதென்றால்”, அறிவு என்பதே அறிவியல் ரீதியான அறிவு தான். கோபால் குரு – அரசியல் அறிவியலாளர். நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மனநல ஆலோசகர் என்றாலே ஒவ்வொரு நபரின் மூளையில் உதிர்க்கும் கற்பனைக்கு தீர்வாக அனைத்தையும் அமைத்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வரும் நபர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு நபரின் பிரச்சனைக்கும் மனநல ஆலோசகர் என்பவர் மக்களின் மனத்திருப்திக்கு ஏற்றவாறு தீர்வினை கொண்டு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

இதில் அவர்களின் குடும்பம், அவர்களின் சூழல், அவர்களின் கலாச்சாரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்தத் தனிநபருக்கு என்ன தேவையோ அதற்கான தீர்வைக் கொடுக்க வேண்டும் என்பதை மிரட்டியும், மிரட்டாத தொனியிலும் கேட்டுவருகிறார்கள்.உதாரணமாக காதலில் ஒரு சிக்கல், திருமணத்தில் ஒரு பிரச்சனை என்று வரும்போது மனநலஆலோசகரின் உதவியை நாடுகிறார்கள். காதலைச் சேர்த்து வைப்பதும், பிரித்து வைப்பதும் ஆலோசகரின் வேலை அல்ல. இதில் அவர்கள் முழுவதுமாக நம்புவது என்னவென்றால், மனநலஆலோசகர் என்ன சொன்னாலும் அவர்களின் சூழலும், வீட்டில் உள்ள நபர்களும் மாறி விடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

உண்மையில் ஒரு வயது வந்த இளைஞர்களின் காதல் என்பதே ஒருவித புரட்சியுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்றே கருதுகிறார்கள். காதலிக்கும் நபரில் யாரோ ஒருவர் ஒரு கோழையை வீரனாக்க வேண்டும் என்றும், சுட்டித்தனமாக இருந்தால் பொறுப்பான நபராக மாற்ற வேண்டும் என்றும், குடி, போதையில் அடிமைப்பட்டு இருந்தால், அதிலிருந்து மீட்டு ஒரு அங்கீகாரமிக்க நபராக மாற்ற வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இப்படி பலவிதமாக சமூகத்தில் பொருத்தமில்லாத நபராக இருக்கும் ஒருவனை/ஒருத்தியை பெற்றோரால், சமூகத்தால் செய்ய முடியாததை காதல் செய்து காண்பித்துவிட்டது என்று உரக்கச் சொல்லுவத்தைத் தீவிர விருப்பமாக பலரும் கருதுகிறார்கள். அதில் கொஞ்சங்கூட தவறுமில்லை, குறையுமில்லை.

தற்போது இம்மாதிரியான பிரச்சனைகளுடன் மனநல ஆலோசகர்களிடம் உதவிக்கும் வருகிறார்கள். அங்குதான் கிளைண்ட்டுக்கும், மனநல ஆலோசகர்களுக்கும் இடையில் ஒரு சிறு பிரச்சனை உருவாகிறது.ஒரு பெண் தன்னுடைய ஜாதி விட்டு, வேறு ஒரு ஜாதியில் இருக்கும் பையனை விரும்புவதாக கூறினார். இதில் அவருடைய தூக்கமின்மை, சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, நேர்த்தியாக உடை அணியாமல் இருப்பது, குளிக்காமல் இருப்பது, யாருடனும் பழகாமல் இருப்பது.. இதுபோன்று எப்பொழுதும் கேட்கும் அடிப்படை கேள்விகளுக்கு ஆமாம் என்று பதில் கூறினார்.

அதன்பின் அந்தப்பெண்ணின் பெற்றோர் கூறும் குடும்ப அமைப்புக்கும், அவர்கள் கொடுக்கும் தகவலுக்கும், அவள் படித்து, நம்பிய சமூக புத்தகங்கள் எல்லாமே இந்த காதலுக்கு முழுத் தடைக்கல்லாக இருக்கிறது. அந்தக் காதலனை மனநல ஆலோசகர் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை. காதலிக்கும் இந்தப் பெண் கொடுக்கும் தகவலும், அதனால் வீட்டில் ஏற்படும் விளைவுகளும் சேர்த்து பெற்றோர்கள் கூறும் தகவலும்தான் மனநல ஆலோகருக்குத் தெரிகிறது.

பெற்றோரும், பெண்ணும் மாறி, மாறி தங்களுக்கு ஏதுவாக மகளும், தனக்கு ஏதுவாக பெற்றோரும் இருக்க வேண்டும் என்று மனநல ஆலோசகரிடம் கூறுகிறார்கள். உண்மையில் இந்த இடத்தில் ஒரு மனநல ஆலோசகர் என்ன செய்ய முடியும் என்பதே சமூகத்தின் பொதுக் கருத்தாக மாறுகிறது.அந்தப் பெண் தினம் செய்யக்கூடிய நிகழ்வுகளை தடையில்லாமல் செய்வதற்கும், அவளின் உணர்வுகளை கையாளுவதற்கும் மட்டுமே அவளிடம் புரிய வைக்க முயற்சி செய்ய முடியும். பெற்றோரிடம் ஒரு வயது வந்த பெண்ணின் விருப்பத்தைப் புரிந்து அதற்கேற்றாற் போல் சப்போர்ட்டாக இருக்கப் பாருங்கள் என்றுதான் சொல்ல முடியும்.

காதலில் வரும் பயம்/வேலையில் ஏற்படும் தடுமாற்றம்/திருமண உறவில் ஏற்படும் குழப்பம் இந்தக் காரணங்களால், அதனால் ஏற்படும் தொடர் நிகழ்வுகளால் மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். உதாரணமாக அந்த மனஉளைச்சல் நேரத்தில் நம் மனது, ஒரு பாறை தன் மீது இருப்பது போன்ற கற்பனையில் இருக்கும். அதன் வலியைப் பற்றியும், அதன் பாரத்தைப் பற்றியும், அந்தப்பாறை உங்களை முழுவதுமாக ஆக்கிரமிப்பது பற்றியும் தொடர்ந்து பேசுவதும், அதே ரீதியில் நிஜ வாழ்க்கையைப் பார்ப்பதுமாக இருப்பார்கள்.அம்மாதிரியான எண்ணங்களும், கற்பனையும் உங்களை எதுவுமே செய்ய விடாது.

யாரோ ஒருவருடன் சண்டை போடும் போது அதில் எளிதாக உங்களுக்கான பதில் கிடைக்கும், பதில் இல்லையென்றாலும் வீண் விவாதம் வேண்டாம் என்று விலகி விடுவோம். ஆனால் உங்கள் மனதுக்குள் தோன்றும் எண்ணங்களுக்குள் நடக்கும் வாதங்களுக்கு ஒருவரின் உதவியை நாடுகிறீர்கள். அதனை மட்டுமே அவர்களால் சரி செய்ய முடியும். சரி செய்ய முடியவில்லை என்றால், மூளை நரம்பியல் பிரச்சனையாக இருக்கிறதா என்பது தெரிய வரும் போது, மனநல மருத்துவரிடம் பாருங்கள் என்று முறையாக தெரியப்படுத்துவார்கள்.

ஆலோசகரின் முன் அமர்ந்திருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அவர்கள் சொல்கிற போதே ஒரு தீர்மானத்துக்குள் அவர்கள் வந்திருப்பார்கள். அதனை ஆலோசகர் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஒருவகையில் தங்களைத் தாங்களே கண்டுகொள்ள ஒரு கருவியாக ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.

மனநல ஆலோசகரின் உதவியை நாடி வந்த பின், காதலை சேர்த்து வைக்கவில்லை, திருமணம் தாண்டிய உறவுக்கு உதவியாக இல்லை என்று மனநல ஆலோசகரை ஒரு பொய்யான நபர் என்று எளிதாக கூறி விடுகிறார்கள்.இங்கு அறிவுரை என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அதற்காக இந்த அறிவுரை மனிதர்களின் கற்பனைக்கு ஏதுவாக இல்லை என்றதும், அதை சரியில்லை என்று கூறுவதும் ஒவ்வொரு நபரின் கருத்தாக மாறிவிடும். அதை யாரும் பெரிதுப்படுத்துவதும் இல்லை.

இன்றைய சூழலில் பலரும் சைக்காலஜி ஆன்லைனிலும், பல்கலைக் கழகத்திலும் படித்து விட்டு இணையத்தில் அதைப்பற்றி உரையாடும் போது அவர்களின் படிப்பையும், துறையையும் தவறாக சித்தரிக்கும் தன்மையும் இதில் இருக்கிறது. நேரடியாக லீகல் பிரச்சனை என்று வரும் பொழுது சரியாக படித்து இருக்கும் மனநல ஆலோசகர்கள் அதனை சந்திப்பார்கள். ஆனால் கிளையண்ட்க்கு சாதகமாக பேசவில்லை என்றதும் தவறாக பரப்பினால் அவர்களின் சூழலையும் கேள்விக்குறியாக்குகிறார்கள்.

கவுன்சிலிங் என்பது வெளியே தெரியும் ஒரு பொருள் இல்லை, நேற்று மனநல ஆலோசகர் சொன்னதை தெளிவாகக் கேட்டவர், அடுத்த நாள் அப்படி எதுவும் அவர்கள் சொல்லவே இல்லை என்பதையும் கூறும் சூழல் இருக்கிறது. அதனால் எளிதாக மக்களும் இணைய தளத்தில் தவறாக பரப்பியும் விடுகின்றனர்.

ஒரு மனநல ஆலோசகர் உங்களின் பிரச்சனைகளுக்கு எந்தவித மாயாஜாலங்களை நிகழ்த்திக் காட்டுபவர் இல்லை. அவர்கள் உங்களின் உணர்வுகளில் நீங்கள் சிக்கிக்கொண்டு கடலுக்குள் மூழ்கித் திணறும் சூழலில் இருக்கும் கற்பனையில் இருந்து மீட்டு எடுப்பவராக மட்டுமே இருப்பார். பிரச்சனையில் இருப்பவர் கடலின் அலையின் வேகம் அதிகமாக இருக்கிறது என்றும், கடல் எதுவுமே பதில் கொடுக்கவில்லை என்றும் பலவித சம்பவங்களை இது போல் விளக்குவார். அவரின் பிரச்சனையை பெரிதுப்படுத்தாமல் எளிதாக சொல்லும் போது, பிரச்சனைக்குரிய நபரின் எண்ணத்தை சீண்டிப் பார்ப்பது போல் அவருக்கு இருக்கும். ஆனால் அந்த எண்ணத்தின் கற்பனையை எளிமைப்படுத்தி நிஜம் இது தான் என்று புரிய வைக்கும் முயற்சியில் மனநல ஆலோசகர் பேசுவார்.

உண்மையில் மனநல ஆலோசகர் கிளையன்ட் சொல்வதை எந்த ஜட்ஜ்மென்ட் எதுவும் செய்யாமல் முழுவதுமாகக் கேட்பார்கள். இதற்காகத்தான் மனநல ஆலோசகரைத் தேர்ந்து எடுக்க செய்கிறார்கள். முதலில் அதற்கு மனநல ஆலோசகர்கள் உண்மையாக இருக்க வேண்டும்.அதற்கு அந்த மனநல ஆலோசகர் அவர் உங்களின் பிரச்சனைகள் போன்று பலரின் பிரச்சனைகளை காது கொடுத்துக் கேட்பவர் மற்றும் பலரின் சூழல்களை பார்த்தவர் என்ற அடிப்படையில் உங்க கற்பனையின் வீரியத்தை எளிதாக மாற்றிக் கூறும் தகுதியை அவர் பெற்றிருப்பார். இது தான் ஒரு மனநல ஆலோசகரிடம் ஒரு கிளையண்ட் எதிர்பார்க்க முடியும்.

அதை மீறி ஏன் கட்டப்பஞ்சாயத்து செய்யுறீங்க, ஏன் அவர்களுக்கு அட்வைஸ் செய்கிறீர்கள் போன்ற வார்த்தைகளை மனநல ஆலோசகரிடம் உபயோகிப்பது சரியாக இருக்காது. அவரின் அடிப்படை கடமை தன்னிடம் வரும் நபருக்கான உணர்வைக் கையாளும் நபராக மட்டுமே மாற்ற முயற்சி செய்வார். அதை மீறி கிளையண்ட் வீம்பாகவோ அல்லது ஏதோ எண்ணத்தின் தாக்கம் அதிகமாகவோ இருக்கும் பொழுது மனநல ஆலோசகர் மனநல மருத்துவரைப் பார்க்க கூறிவிடுவார்.

அதை மீறி மனநல ஆலோசகர் உங்களுக்கு எந்தவித மந்திர தந்திரத்தையும் செய்து தர முடியாது என்பதே நிஜம்.வாழ்வியல் அனுபவத்தையும், புத்தகங்களில் படிக்கும் கோட்பாட்டையும், அறிவியலையும் எல்லா நேரங்களிலும் நம் வீடுகளில் புகுத்த முடியாது. அது ஒரு சிக்கலான இடமாக என்றுமே இருக்கும், இருக்கவும் செய்கிறது.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Gayatri Mahathi ,Dinakaran ,
× RELATED வியர்வை மற்றும் தோல் அரிப்பிலிருந்து விடுபட…