×

இளநரை காரணமும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஒரு மனிதனின் வயோதிகம் அல்லது முதுமையை நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என வரிசைப்படுத்தினர் நம் முன்னோர்கள். முதுமையை குறிக்கும் முதல் குறியாக தலைமுடி நரைத்துப் போவதை குறிப்பிடுகிறோம்.

இந்தியர்களை பொருத்தவரை, மரபியல் காரணிகள் இருப்பதால், 25 வயதிற்கு முன், எந்த வயதிலும் நரை வரலாம். அதிலும், தற்போதுள்ள துரித உணவு பழக்கவழக்கங்களால், ஏழு, எட்டு வயது பள்ளி குழந்தைகளுக்கே, நரைமுடி இருப்பதை பார்க்கிறோம். இந்த இளநரை ஏற்பட என்ன காரணம். அதற்கு தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.

தலைமுடிக்கு நிறம் எவ்வாறு கிடைக்கிறது என்றால் நமது தோலில் காணப்படும் மெலனோசைட்ஸ் எனப்படும் நிறமிதான் மயிர்க்கால்கள் வழியாக சென்று தலைமுடிக்கும் கருமை நிறத்தை கொடுக்கிறது. எனவே, மெலனின் நிறமி ஆரோக்கியமாக உள்ளவரை தலைமுடியின் நிறமும் கருமையாக இருக்கும். இந்த நிறமியின் உற்பத்தி குறைய துவங்கினால், தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு நிறமி குறைவதற்கான காரணம், மரபியல் காரணிகள், சுற்றுச்சூழலில் உள்ள மாசு, நோய்தொற்று, சுவாச கோளாறுகள், ஆஸ்துமா, சிகரெட் பழக்கம், மன அழுத்தம், அதிக நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பதால், அதிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் பாதிப்பு, புற்றுநோய், மலேரியா உட்பட சில நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகள் என, இள நரை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. மேலும், ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக, பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்றவை குறைவதாலும் இளநரை வரலாம்.

அதுபோல தைராய்டு, தூக்கமின்மை, ஹேர் டை ஈடுவது, எண்ணெய் குளியலை தவிர்த்தல், எண்ணெய் தடவுவதை தவிர்த்தல் முதலான காரணங்களினாலும் நரை தோன்றுகிறது. சிலருக்கு, தைராய்டு ஹார்மோனுக்கும், இளநரைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் நிறமியை தக்கவைத்து கொள்ளும் தன்மையை மயிர்க்கால்கள் இழப்பதால், முடியின் நிறம் வெளுத்து நரை தோன்றுகிறது.

தீர்வுகள்:
சிறுவயதிலேயே, இளநரை தோன்றும்போது, ரத்தப் பரிசோதனை செய்து, என்ன ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது இளநரையை தடுக்கலாம். பால் பொருட்கள், முட்டை, வெள்ளாட்டுக்கறி, எலும்பு, ஈரல், பாதாம், முந்திரி, வால்நட், நிலக்கடலை, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளும் பொழுது சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.

அடர்ந்த நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், எடுத்துக்காட்டாக கேரட், பீட்ரூட், பச்சை காய்கறிகள், கீரைகள், பப்பாளி, மாதுளை போன்ற பழங்கள், நெல்லி, எலுமிச்சை, பச்சைப்பயறு, கருப்பு கொண்டைக்கடலை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.தைராய்டு சுரப்பி சரிவர சுரக்காத போது டைரோசின் எனும் அமினோ அமிலம் மெலனினாக மாற்றமடைவது தடைப்பட்டு மெலனின் குறைபாடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய தைராய்டு சுரப்பை தூண்டுவிக்கும் மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.

புகை பிடித்தல் காரணமாக உடலில் ஒவ்வொரு அணுக்களையும் நிக்கோடின் எனும் நச்சு பாதிக்கிறது. இவை மயிர்க்கால்களை அழிக்கிறது. இதை சரிசெய்ய நச்சு முறிவு ரத்த சுத்திக்கான மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.மன அழுத்தம், தூக்கமின்மை காரணமாக உடலில் ரத்த பித்தம் அதிகரித்து மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு மிகவும் குறுகிய காலத்தில் தலைமுடி நரைத்துப் போகச் செய்கிறது. மன அழுத்தம் குறைப்பதற்கான மருத்துவம் மற்றும் ஆழ்ந்த உறக்கம் இதை சரிசெய்ய உதவும்.

இப்போது வேகமாக பரவி வரும் ஹேர் கலரிங் கலாச்சாரம் நரை ஏற்பட மிக முக்கிய காரணமாகும். இவ்வகை பூச்சுகளில் சேர்க்கும் அமோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் தலைமுடியை வெளுக்கச் செய்கிறது.சிலவகை நோய்த்தொற்று குறிப்பாக பூஞ்சை நோய்கள், பொடுகு போன்றவைகளும் மயிர்க்கால்களை அழிக்கிறது. அரிதாகக் காணப்படும் முற்றுடல் வெளுப்பு நோயில் தலைமுடி, புருவம், கண் இமை என உடலில் உள்ள அனைத்து மயிர்கால்களிலும் நிறமிகளின்றி வெளுப்பாகவே காணப்படும். இது மருத்துவத்தால் தீராத நோயாகும்.

செயற்கையான ரசாயனங்கள் கலந்த முடி ஹேர் -டையினால் தோல் எரிச்சல், கண் எரிச்சல், நாளடைவில் சைனஸ் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
கறிவேப்பிலை, கரிசாலை, கருஞ்சீரகம், வெந்தயம், மருதாணி, கற்றாழை, நெல்லி இவைகள் சேர்த்து தயாரித்த தைலம் மற்றும் இவற்றின் பொடிகளை பற்றுகளாகவும் பயன்படுத்தி நரைமுடியின் நிறத்தை மாற்றி, மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டமளித்து பூஞ்சை நோய்களை சரி செய்து நரைமுடி மேலும் வராமல் தடுத்து இளமையை பாதுகாத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: எஸ்.ராமதாஸ்

The post இளநரை காரணமும் தீர்வும்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dinakaran ,
× RELATED ஆன்மிகம் பிட்ஸ்