1980 முதல் 1990 வரை கமல்ஹாசனின் படங்களில் தொடர்ந்து காமெடி செய்து வந்த ஆர்.எஸ்.சிவாஜி, ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஜனகராஜிடம், ‘சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்று அடிக்கடி பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது. பிறகு பல படங்களில் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி பலர் பேசி நடித்துள்ளனர். சமீபத்தில் நயன்தாராவின் தந்தை வேடத்தில் ‘கோலமாவு கோகிலா’, விவேக்கின் உதவியாளராக ‘தாராள பிரபு’, சாய் பல்லவியின் தந்தையாக ‘கார்கி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆர்.எஸ்.சிவாஜி கடைசியாக நடித்த ‘லக்கி மேன்’ என்ற படம் நேற்று திரைக்கு வந்தது. இதில் அவர் யோகி பாபுவுக்கு கார் ஓட்ட பயிற்சி அளிப்பவராக நடித்திருந்தார்.
பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில், அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ள அவர், டி.வி தொடர்கள் மற்றும் வெப்தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆர்.எஸ்.சிவாஜி, சிகிச்சை பலனின்றி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுச்செய்தி அறிந்து தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
The post ‘சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்ற வசனத்தால் புகழ்பெற்றவர் பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி திடீர் மரணம் appeared first on Dinakaran.