×

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். மாணவர்களிடையே தமிழ்மொழிப் பற்றை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக இலக்கியப் போட்டிகள் நடத்துதல், குறள் பரிசுத் திட்டம், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி என திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு மாணவர்கள் பட்டை தீட்டப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் இன்று புதியதாக இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை எனும் திட்டத்தினை முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்மிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று (30.08.2023) தொடக்கி வைத்து பின்வருமாறு விழாப் பேருரை ஆற்றினார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வையிரத்தின் வாள். என்றார் பாரதிதாசன்.

இத்தகைய சிறப்பினைப் பெற்ற உலகின் மூத்த மொழியாக விளங்கும் நம் தாய்மொழியான தமிழ் மொழி இயல்-இசை-நாடகம் எனும் முத்தமிழ் மொழியாகப் பரந்து விரிந்து நிற்கிறது. தன் எழுத்துக்களால், உரைகளால், நாடகங்களால், திரைப்பட வசனங்களால், திரை இசைப் பாடல்களால் இப்படி பன்முக நோக்கில் முத்தமிழக்குப் பெருமை சேர்த்த முத்தமிழறிஞர் கலைஞர் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற உறுதிப்பாட்டோடு உலா வந்தவர். செம்மொழித் தகுதியை நம் தமிழ் மொழிக்குப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். முத்தமிழறிஞர்தம் பாசறையில் பயின்று, பண்பட்டு இன்று அவர்தம் வழியில் திராவிட மாடல் ஆட்சியை தந்துகொண்டிருக்கும் முதலமைச்சர் தமிழைப் பற்றிக் கண்ட கனவுகள் நிறைவேறுவதற்காகவும் தமிழின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டிவருகிறார்.

அவ்கையில், இந்த ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு, கல்லூரி மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கிய சிந்தனையையும் மேம்படுத்தி அவர்களை தமிழ் ஆர்வலராகவும் அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கில் தமிழறிஞர்களைக் கொண்டு ஒரு நாள் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை உருவாக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களுக்காக மட்டுமே மனப்பாடம் செய்கின்ற மொழி நம் தமிழ் என்ற தவறான பார்வை மாணவர்கள் மனதில் வந்துவிடக் கூடாது என்கிற உயர்ந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்பட்டுள்ள பயிற்சிப் பாசறையின் தொடக்கவிழா சென்னையில் புகழ்பெற்ற இந்த எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறுவது மிகவும் பெருமை வாய்ந்ததாக அமைகிறது.

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ஏற்கெனவே நடத்தப்பெற்றுவரும் இலக்கியப் பயிற்சிப் பட்டறை என்ற தலைப்பில் ஆண்டுக்கு 200 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் மாவட்டத்திற்கு சுமார் ஐந்து அல்லது ஆறு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சிப் பாசறை வாயிலாக மாவட்டத்திற்கு 100 பேர் என 38 மாவட்டங்களிலும் ஆண்டுக்கு சுமார் 3,800 அல்லது 4,000 கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். கடல்போல் விரிந்திருக்கும் தமிழை கைகளால் அள்ளிப் பருகி விட முடியாது. பாடப் புத்தகங்களில் உள்ள செய்திகளை படிப்பது மட்டுமே பயன்தராது.

வாழ்க்கைக்கு தேவையான பிற செய்திகளையும் இந்த இளம்பருவத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்பாசறை, பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற அறிஞர்களைக் கொண்டு மாணவர்களிடையே தமிழின் மீதுள்ள தாகத்தை, ஓரளவு தணிக்கும் என்ற அளவற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்தப் பயிற்சிப் பாசறையில் கண்களைத் திறந்த கதை உலகம் என்ற தலைப்பில் சென்னைத் தொலைக்காட்சியின் மேனாள் இயக்குநர் எம். எஸ். பெருமாள் செம்மொழித் தமிழின் சிறப்பு என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும் என்ற தலைப்பில் நந்தனம் அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர் சொற்கோ. கருணாநிதி. மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும் என்ற தலைப்பில் அமுதசுரபி திங்களிதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு.லிங்குசாமி நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ் என்ற தலைப்பில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம் மாணவச் செல்வங்களாகிய உங்களிடையே தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

இப்பயிற்சிப் பாசறையில் கலந்து கொண்ட மாணவர்கள், அறிஞர்களிடமிருந்து தாங்கள் பெற்ற அனுபவங்களை இப்பயிற்சிப் பாசறையில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காத மாணவர்களிடையே கொண்டு செல்லவும் அவர்களுக்கும் அன்னைத் தமிழ் மீதான ஆர்வத்தை பெருக்கவும் வேண்டும் என்பதே இப்பாசறையைத் துவக்கியதன் குறிக்கோள் ஆகும். தமிழ் வளச்சி இயக்குநர் ஔவை அருள் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா எத்திராஜ் கல்லூரி முதல்வர் உமா கௌரி கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையை தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Tamil Development Department ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...