போலி பாஸ்போர்ட் தயார் செய்து 100க்கும் மேற்பட்டோரை வெளிநாடு அனுப்பிய முக்கிய ஏஜென்ட் சிக்கினார்: தலைமறைவான கூட்டாளிக்கு வலை

சென்னை, ஆக.6: சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி, மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி இந்தியாவை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர், போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மலேசிய நாட்டிற்கு செல்வதற்காக முயற்சி செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து அந்தோணிசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை செய்தபோது, ஒரு சில காரணத்தினால் மலேசியாவிற்கு செல்ல தடைவிதித்து அந்நாட்டு அரசாங்கம் அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி உள்ளது.

பின்னர் அந்தோணி சாமி மீண்டும் மலேசியா செல்ல முடியாமல் தவித்த போது, பெரோஸ் கான் என்பவரின் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர் அளித்த தகவலின் பேரில் அந்தோணிசாமி, சையது அபுதாஹிர் என்பவரிடம் சென்றுள்ளார். அவர், ஆண்டனி சாமி என்ற பெயரை மாற்றி போலியாக ஆதார் கார்டு தயார் செய்து அதன் மூலமாக போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த போலி பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு மலேசியா செல்ல முற்பட்ட போது சென்னை விமான நிலையத்தில் அந்தோணி சாமி பிடிபட்டது தெரியவந்தது. பின்னர் அந்தோணி சாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்னர் இவ்வழக்கில் போலி பாஸ்போர்ட் தயார் செய்யும் ஏஜென்ட்களை பற்றிய தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முக்கிய நபரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது பெரோஸ்கான் (45) என்பவரை கடந்த 3ம் தேதி கைது செய்து விசாரணை செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் தயார் செய்து அதன் மூலம் 100க்கும் மேற்பட்டோரை மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது.

மேலும் பெரோஸ் கானுக்கு உடந்தையாக புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த மற்றொரு போலி பாஸ்போர்ட் ஏஜென்ட் சையது அபுதாஹிர் என்பவர் தலைமறைவானதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மற்றும் மலேசியாவில் உள்ள பாஸ்போர்ட் அதிகாரி ஒருவரை கையில் வைத்துக்கொண்டு போலியான பாஸ்போர்ட் மூலமாக பலரை வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பெரோஸ்கான் விசாரணைக்குப் பின்னர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். போலி பாஸ்போர்ட் மூலமாக எத்தனை பேரை இந்த கும்பல் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பி உள்ளனர் என்பது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

முத்திரைகள் பறிமுதல்
பெரோஸ்கான் மற்றும் சையது அபுதாஹிர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில் மொத்தம் சுமார் 105 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் போலி ஆவணங்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு ஆவணங்களில் பயன்படுத்துவதைப் போன்று போலியான அரசாங்க மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயர் முத்திரைகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், கணினிகள், ரூ.57,000, சிங்கப்பூர் டாலர் 1000, தாய் பட் 15,500, மலேசியன் ரிங்கிட் 25 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.

போலீசார் எச்சரிக்கை
ஏஜென்ட்கள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக உஷாராக இருக்குமாறும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

The post போலி பாஸ்போர்ட் தயார் செய்து 100க்கும் மேற்பட்டோரை வெளிநாடு அனுப்பிய முக்கிய ஏஜென்ட் சிக்கினார்: தலைமறைவான கூட்டாளிக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: