வத்தல் மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தர்மபுரி: ஆயுத பூஜையை முன்னிட்டு விடப்பட்ட தொடர் விடுமுறையால், வத்தல்மலைக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை பகுதியில் மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்காடு, ஊட்டி போல் சீதோஷ்ண நிலை காணப்படும். கடந்த 2012ம் ஆண்டு வத்தல்மலை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வத்தல்மலை செல்லும் மண் சாலை ₹17 கோடி மதிப்பில் தார் சாலையாக மாற்றப்பட்டது. மேலும் மலையில், தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதையொட்டி வனத்துறை சார்பில், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதனால் வத்தல்மலை பகுதிகள் முழுவதும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Advertising
Advertising

கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை, ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை வந்ததால் தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பைக் மற்றும் கார்கள் மூலம்  வத்தல் மலைக்கு படையெடுத்தனர். அங்கு தொடர் மழையால் ஏற்பட்டுள்ள அருவிகளில் குளித்தும், சீதோஷ்ணநிலை அனுபவித்து ரசித்து மகிழ்ந்தனர். அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில், போதிய பணியாளர்கள் இல்லாததால் வனத்துறையினரால் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க முடியாமல் திணறினர். வத்தல் மலையில் போதிய போக்குவரத்து வசதியும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தினால், ஏற்காடு, ஏலகிரி ஊட்டி போல் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக அமையும் என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Related Stories: