×

தொடர் விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை

ஊட்டி: பண்டிகை விடுமுறை முடிந்தும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையாமல் உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆயுத பூஜை விடுமுறை, வார விடுமுறை என அரசு விடுமுறை தொடர்ந்து வந்த நிலையில் சுற்றுலா பயணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஊட்டியை முற்றுகையிட ஆரம்பித்தனர். இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. ஊட்டி நகரம் சுற்றுலா பயணிகள் வாகனங்களல் தத்தளித்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.இதனால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. குறிப்பாக தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. கடந்த மாதம் வரை ஊட்டியில் மழை பெய்துக் கொண்டிருந்ததால், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால், இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையும் என வியாபாரிகள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், நீலகிரி காலநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags : Tourist crowds ,Ooty ,holiday season ,
× RELATED ஊட்டி - கோத்தகிரி சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்