×

தொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மூன்று நாட்களில் ரூ4.62 லட்சம் வருவாய்

கோவை:தொடர் விடுமுறையையொட்டி கோவை குற்றால அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடந்த மூன்று நாட்களில் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக வனத்துறைக்கு  ரூ.4.62 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.கோவை குற்றாலம் அருவி சாடிவயல் அருகே உள்ளது.  வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளித்து மகிழ கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் அதிக அளவில் வருவது வழக்கம். கடந்த 6 மாதங்களாக வறட்சி மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அடிக்கடி மூடப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் கடும்  ஏமாற்றமடைந்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கோவை குற்றால அருவி மீண்டும் திறக்கப்பட்டது. ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையையொட்டி கோவை குற்றால அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிக்கு செல்ல நுழைவு கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், கேமரா பயன்படுத்தும் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் வனத்துறையால் வசூலிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் பல்வேறு கட்டணங்கள் வாயிலாக ரூ.4.62 லட்சம் வனத்துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக நேற்று ரூ.1.80 லட்சம் வசூலாகி உள்ளது.

அதேபோல கடந்த மூன்று நாட்களில் பெரியவர்கள், குழந்தைகள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போளுவாம்பட்டி வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் அதிக ஆழமுள்ள, ஆபத்தான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அடிக்கடி எச்சரிக்கை செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.

Tags : holidays ,Coimbatore Courtallam ,
× RELATED வால்பாறைக்கு விதிமீறி வருகை தரும் சுற்றுலா பயணிகள்