×

51 நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் திறப்பு

கோவை, வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் 51 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. கோவை மேற்குதொடர்ச்சி மலை சாடிவயல் அருகே கோவை குற்றாலம் உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால், விடுமுறை நாட்களில் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவிக்கு வருகின்றனர். இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறுவாணி அடிவாரம் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 4ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். மேலும், கனமழையால் அருவிக்கு செல்லும் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டது.

அருவியில் குளிக்கும் பகுதிகளில் பெரிய, பெரிய குழிகள் ஏற்பட்டது. வெள்ளத்தில் மண், ஏராளமான மரங்கள், பாறைகள் அடித்துவரப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்தது. இதனால், கோவை குற்றால அருவிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.  இதை தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்தில் உள்ள குழிகளை மூடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் அனைத்தும் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து 51 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கோவை குற்றாலத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கோவை குற்றாலத்தில் குவிந்தனர்.

Tags : Goa Courtallam ,
× RELATED 51 திருநங்கைகளுக்கு அரசு வழங்கிய இலவச பட்டாவை ரத்து செய்ய வேண்டும்