4 ஏக்கர் நிலம்தான். ஆனால் தென்னை, பாமாயில், மா, பலா, வாழை, தேக்கு, மூங்கில் என பல வகை மரங்கள் நிறைந்து காடு போல காட்சி அளிக்கிறது காணி நிலம். இந்த பண்ணைக்கு பெயரே அதுதான். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் குமளம் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்த பண்ணையின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தைத் தாண்டும். இந்தப் பண்ணை விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் ஒரு பயிற்சிக்கூடமாவே விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை இந்த பண்ணையை மாதிரி பண்ணையாக அங்கீகரித்திருக்கிறது. இந்த பண்ணையை நிர்வகித்து வரும் மூத்த விவசாயியான சோமு புதுச்சேரியில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது இயற்கையை, வேளாண்மையை அறிய விரும்புகிறவர்களுக்கு பாடம் எடுக்கிறார். நம்மிடம் பேசியபோதும் அப்படித்தான். எல்லாமே பாடம் போல இருக்கிறது.
“புதுச்சேரி மாநில கல்வித்துறையில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றினேன். பின்பு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று ஓய்வுபெற்றிருக்கிறேன்.
பள்ளியில் பணியாற்றியபோது மாணவர்களிடம் மரம் நடுதல், இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். எனது அப்பா காலத்தில் நெல் மட்டுமே பயிர் செய்து வந்தார். பிறகு வேளாண்மையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக பல பயிர்களை சாகுபடி செய்து காணி நிலம் என்ற பண்ணையை உருவாக்கினேன். அதில் நிரந்தர வருமானத்துக்காக பிரதான பயிராக தென்னை, பாமாயில் பயிரிட்டுள்ளேன். இதன் மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதில் ஊடுபயிராக பவானிசாகர்-2 என்ற வகையை சேர்ந்த புதிய ரக மஞ்சள், வாழை அதிகளவில் பயிரிட்டுள்ளேன். மஞ்சளுக்கு மூடாக்கு அமைத்திருக்கிறோம். இதன்மூலம் மஞ்சள் மட்டுமே நன்கு வளர்ந்து வரும். அதனுடன் எந்தவித களைகளும் வளராது. இதனால் களை எடுக்கும் செலவு மிச்சமாகும். மஞ்சளுக்கு வேப்பங்கொட்டைத்தூள், புண்ணாக்கு, எண்ணெய், பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், நாட்டுமாட்டு உரம், நுண்ணுயிர் உரம் போன்றவற்றை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகிறேன். இதன்மூலம் 1 ஏக்கருக்கு 600 கிலோ மஞ்சள் அறுவடையாக கிடைக்கிறது. நாங்கள் எந்த பயிருக்கும் ரசாயனம் கலந்த உரம் பயன்படுத்துவது கிடையாது. இயற்கை உரங்களை நாங்களே தயார் செய்து வருகிறோம். சாதாரணமாக ரூ.2 லட்சம் செலவு செய்து ரூ.4 லட்சம் வருமானம் பார்ப்பதை விட எந்தவித செலவும் இல்லாமல் ஊடுபயிராக பயிரிட்டு ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்கிறது. செலவு இல்லா, உழவு இல்லா வருமானமாக இது இருக்கிறது. மஞ்சளை இங்கேயே அவித்து பதப்படுத்தி, சமையல், குளி மஞ்சள் தயாரிக்கிறோம். அதனை பொடியாக்கி பாக்கெட் 100 கிராம் ரூ.50க்கு விற்பனை செய்து வருகிறோம். இதனால் தூய்மையான மஞ்சள்தூள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது.
முதன்முதலில் பாமாயில் பயிர் செய்யும்போது அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றது. நடவு செய்யப்பட்டு5 ஆண்டுகளுக்கு பின் மகசூல் கிடைக்கிறது. ஒருமுறை 2 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கிறது. பாமாயில் மரம் 40 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பலன் தரக்கூடியது. இதில் கால்நடைகளால் எந்தவித பிரச்னையும் ஏற்படாது. தண்ணீர் இருக்கும் இடத்தில்தான் பாமாயிலை பயிர் செய்ய வேண்டும். பாளை வரும்போது காண்டாமிருகம் வண்டு வரும். அப்போது வேப்ப எண்ணெய் போன்றவற்றை தெளிப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை ரெயின்கன் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். பாமாயில் மரத்தில் வெட்டப்படும் குலையில் இருந்து எண்ணெய், காஸ்மெட்டிக் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்கின்றனர். 45 நாட்களுக்கு ஒருமுறை வெட்டப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கிறது. அதிகளவில் பயிரிட்டால் நல்ல வருமானம் தரும்.
பாக்கு கன்றுகள், தென்னங்கன்றுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இதன்மூலம் ஆண்டுக்கு5 ஆயிரம் கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. குடுமியான்மலை நெட்டை தென்னை மரக்கன்றுகள் அதிகளவில் புதுவை, தமிழக பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இங்குள்ள தென்னை மரங்களில் இருந்து விழும் தேங்காயை எடுத்து எண்ணெய் தயார் செய்து பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறோம்.தட்பவெப்ப சூழலை எதிர்கொள்ள பாக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறோம். இதன் மூலம் உள்ளே இருக்கும் ஈரப்பதம் வெளியே போகாமலும், வெளியில் இருந்து வெப்பம் உள்ளே வராமலும் தடுக்கப்படுகிறது. இந்த சூழல் மலையில் வளரக்கூடிய காப்பி, மிளகு போன்ற மலைத்தோட்ட பயிர்களை சமவெளியில் சாகுபடி செய்ய தோதாக இருக்கிறது. சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இதுகுறித்து பயிற்சி அளிக்கும்போது நன்றாக கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் இங்கிருந்து வெளியே சென்றவுடன் வழக்கம்போல் ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். விவசாயிகளுக்கு எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அவர்கள் இயற்கை விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காது என்றே தவறாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு போதிய அளவில் பயிற்சி வேண்டும். இயற்கை விவசாயம் செய்தால்தான்மக்களுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். முறையாக செய்தால் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு
ஆசிரியர் சோமு – 94420 86431
The post இயற்கை விவசாயமே சிறந்தது! பாடம் சொல்லும் காணி நிலம் appeared first on Dinakaran.
