காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தாள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எருமைத் தலையனான மகிஷாசூரனின் அரக்கத்தனம் ஆட்டம் காணும் காலம் நெருங்கியது. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷித்தனர். துர்கா… துர்கா… என்று சிரசின் மீது கைகூப்பித் தொழுதனர். அதில் காலராத்ரி துர்க்கை என்பவள் தனித்துவம் மிக்கவளாக பொலிந்தாள். அவளையே அழகுத் தமிழில் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர். கருக்கினில் என்பதற்கு கிராமச் சொற்றொடரான வழக்கு மொழியில் கருக்கல் வேளை என்பது பொருள். அதாவது இருள் சூழ்ந்திருக்கும் நேரம் என்பதாகும். முற்காலத்தில் இரவு பூசைகள் இங்கு சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.

பனைமரத்திலுள்ள கருக்குகளில் தன் கூர்மையான சக்தியோடு இவள் உறைவதால் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர். அதற்கு ஆதாரமாக இந்த கருக்கினில் அமர்ந்தாள் ஆலயத்தைச் சுற்றி மாபெரும் பனந்தோப்பு இருந்ததாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். இருளைப்போல கருத்த மேனியை உடையவளாக பயங்கர ரூபத்தோடு விளங்குகிறாள். காற்றினில் அலைந்தபடி இருக்கும் ஈட்டி போன்ற கேசங்கள்.

கண்கள் நெருப்புப் பந்துகள் போல சுழன்று கொண்டிருக்கின்றன. மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை தெறிக்கின்றன. எதிரிகளின் தொல்லைகளை அநாயாசமாக தீர்ப்பதில் இந்த துர்க்கைக்கு நிகர் எவருமில்லை. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் வீதி வழியாக வள்ளல் பச்சையம்மன் சாலை, மேட்டுத் தெரு பஸ் நிறுத்தம் அருகே இக்கோயில் உள்ளது.

இருமாத்தூர் கொல்லாபுரி அம்மன்

நானூற்று ஐம்பது வருடத்திற்கு முன்பு அம்மை நோய் தர்மபுரியை பிடித்து உலுக்கியது. ஏராளமானோர் மடிந்தனர். ஆனால், புடைச்சல்பட்டியில் மட்டும் ஒன்றும் ஆகவில்லை என்று தெரிந்து காரணம் தேடினர். மெதுவாக ஆராய புடைச்சல்பட்டியில் அருளும் மாரியம்மனும், அவளின் தங்கையான கொல்லாபுரித்தாயும்தான் காரணம் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டனர். இருமாத்தூர், திம்மம்பட்டி, கொண்டாரம்பட்டி, கோணம்பட்டி. என்று பன்னிரெண்டு கிராம மக்களும் புடைச்சல்பட்டி அம்மனின் பாதம் பணிந்தனர். பலவிதங்களில் ஆராதித்தனர்.

மாரியம்மன் கொல்லாபுரித்தாயை மக்களுடன் அனுப்பி 12 கிராமங்களை காப்பதாக அருள்வாக்கில் பகர்ந்தாள். ஊர் மக்களுக்கு இருந்த அம்மை நோய் மறைந்தது. இருமாத்தூரில் கல் ஒன்றை நட்டார்கள். கொல்லாபுரி அம்மன் அதற்குள் பரவினாள். சக்தியை பெருக்கினாள். மக்களின் நெஞ்சங்களில் மகிழ்ச்சி பெருகியது. தர்மபுரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழித்தடத்தில் 19வது கிலோ.மீட்டரில் இத்தலம் அமைந்துள்ளது.

வெட்டுவானம் எல்லையம்மன்

மாரியம்மன் கோயில்களுக்கெல்லாம் தலையாய ஆலயமாக இது விளங்குகிறது. எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த பரசுராமர் தன் தாயின் தலையை வெட்டிவிட்டு தந்தையான ஜமதக்னி முனிவரிடம் தாயைக் கொன்றதாக சொல்கிறார். மகனைப் பார்த்து என்ன வேண்டுமென கேட்க என் தாயே திரும்ப வேண்டும் என்கிறார், பரசுராமர். அப்படி தன் தாயின் தலையை வெட்டிய தலமாக இது இருப்பதால் வெட்டுவானம் என்று இத்தலத்திற்கு பெயர் உண்டாயிற்று. அருந்ததிப் பெண்ணின் தலையை தன் தாயின் உடம்பில் மாற்றிப் பொருத்தியதால் மாரியம்மன் ஆயிற்று. புண்ணிய தீர்த்த நீரான கசக்கால்வாய் வழியே சிலை ஒன்று வந்துள்ளது.

பாசனத்திற்காக வெட்டும்போது சிலையின் மீது மண்வெட்டி பட்டு உதிரம் பெருகியது. வெட்டிய உழவன் மயங்கி விழுந்தான். எழுந்து அருள் வந்து ஆடினான். நானே எல்லையம்மன் என்று வாக்காக சொன்னான். அம்மனுக்கு உடனேயே கோயில் எழுப்பினார்கள்.

அம்மன் 16 கலைகளோடு பூரண பிரகாசமாக அருள்வதால் பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்புடையதாகும். அம்மனையும், சந்திரனையும் நேருக்கு நேர் சந்திக்கும் வைபவம் கண்கொள்ளா காட்சியாகும். கண், காது, மூக்கு என்று உடல் உருக்கள் வாங்கிப்போட அது சம்பந்தமான நோய் தீருகிறது. மருத்துவம் முடியாது என்று விட்டதை இவள் தேற்றி அனுப்பும் அனுபவங்கள் இங்கு ஏராளம். இத்தலம் பரசுராமர் உருவாக்கிய 108 துர்க்கை தலத்தில் ஒன்றாகும். சென்னை & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது.

நித்திய சுமங்கலி மாரியம்மன் – ராசிபுரம்

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்கிறார்கள். சித்தர்கள் சஞ்சரித்த கொல்லிமலையின் நான்கு பக்கங்களும் சூழ்ந்திருக்க நடுவே அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் ராஜபுரம் என்பதுதான் ராசிபுரமாயிற்று. நிலத்தை உழுதுகொண்டிருந்த விவசாயி கலப்பையில் ஏதோ தட்டுப்பட்டது. பூமியை கிளறிப் பார்க்க பீடம் இருந்தது. ஆஹா… மகாசக்தி இதற்குள் இருக்கிறாளே என்று பீடத்தையே வழிபட்டனர். அதன் பின்னர் அதற்கு மேல் அம்மனை பிரதிஷ்டை செய்தனர். மரணப் படுக்கை வரை சென்ற பல மன்னர்கள் இவளின் அருளால் பிழைத்தனர். இந்தக் கோயிலின் சிறப்பே கோயிலின் வேம்பு கம்பம்தான்.

பல கோயிலின் திருவிழாவின்போது வேம்பு கம்பம் நடுவர். இதை அம்மனின் கணவனாக ஈசனாக பாவித்து வழிபடுவர். இங்கு பெண்கள் தங்கள் கணவர் உடல்நலம் வேண்டியும், குடும்பப் பிரச்னைகளை தீர்க்கக் கோரியும் கிணற்றில் நீர் எடுத்து வேம்பு கம்பத்தில் ஊற்றி, மஞ்சள் குங்குமம் பூசி அம்மனை வேண்டுகின்றனர். சிலர் பால் அபிஷேகமும் செய்கின்றனர். வருடம் முழுவதும் இந்த கம்பம் அப்படியே நடப்பட்டுதான் இருக்கும். பெண்களின் தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்பவளாதலால் ‘நித்திய சுமங்கலி மாரியம்மன்‘ என்று அழைக்கிறார்கள். ராசிபுரம் & நாமக்கல் பாதையில் இந்த ஆலயம் உள்ளது.

காரைக்குடி – கொப்புடைய நாயகி

செட்டி நாட்டு மக்களின் குல தெய்வம். எல்லாமே கொப்புடையவள் கைகளில்தான் என்று சரணாகதி செய்து விட்டு இப்பகுதி மக்கள் வாழ்கிறார்கள். அம்மனின் பாதத்தில் கடைகளின் சாவியை வைத்து எடுத்துக்கொண்டு வந்துதான் கடையைத் திறக்கிறார்கள். ஆதியில் வீரம்மிக்க மருது சகோதரர்கள், மோர் விற்ற இடையர் குல கிழவி போன்றோரால் திருப்பணி செய்யப்பட்டது. இத்தலத்தின் ஆச்சரியமான சிறப்பே மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஐம்பொன்னாலான நாயகியே உற்சவ காலங்களில் வீதி உலா வருவதுதான். வேறெங்கும் இல்லாத நேர்த்திக் கடனாக பக்தர்கள் விரும்பிய நாளில் அம்பாளை புறப்பாடு செய்து திருவீதி உலா வரச் செய்யலாம்.

அதற்கான செலவை அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இரட்டை மணிமாலை, பிள்ளைத் தமிழ் என்று இவளின் புகழை பலர் எழுதியிருக்கின்றனர். ஒப்பில்லாத வரப் பிரசாதியாக கொப்புடைய நாயகி திகழ்கிறாள். அம்மா… என் குழந்தைகளையும் நீதான் பார்த்துக்கணும் என்று பரம்பரையாக பாதம் பணிவதை இங்கு சகஜமாகக் காணலாம். அம்பாளின் காதில் அணிந்திருக்கும் நகையின் பெயரே கொப்பு.

இதற்கு கிளை என்று பொருள். வம்சத்தை கிளைகள்போல பெருகச் செய்வதால் இவளுக்கு இந்தப் பெயரோ! காரை மரங்கள் அடர்ந்திருந்த இத்தலத்தில் இவள் தவம் மேற்கொண்டாள். அவள் அவ்வாறு தவத்திற்கு அமர்ந்த கதை தனித்த புராணமாக விரியும். அவள் தவமிருந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டது. குழந்தைப்பேறு வேண்டும் என்று வந்தோரை அவள் கைவிடுவதே இல்லை. ‘‘இதுக்குத்தானே நான் இங்க இருக்கேன்’’ என்பதுபோல வீற்றிருக்கிறாள்.

ஆனைமலை – மாசாணியம்மன்

நன்னனூரை ஆண்ட நன்னன் தோட்டத்தில் விளையும் மாம்பழத்தை யார் பறித்து சாப்பிட்டாலும் மரண தண்டனைதான். ஒருமுறை பழம் நழுவி ஆற்றோடு வந்தது. மிதந்து வந்த பழத்தை கன்னி ஒருத்தி சாப்பிடும்போது வீரர்கள் பார்த்தனர். மரண தண்டனையும் விதித்தனர். எனக்குத் தெரியாது உண்டு விட்டேன் என்று கேட்டுப் பார்த்தாள். ஆனாலும், மரண தண்டனை விதித்தனர். நீதி தேவதையின் கண்கள் திறந்தன.

அந்தக் கன்னியே மயானத்திலிருந்து மாபெரும் சக்தியாக மாசாணியம்மனாக விதிர்த்தெழுந்தாள். தன்னைப்போல வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறாள். எங்கேனும் அநீதி இழைக்கப்படுகிறதெனில் இவளால் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. இங்குள்ள அம்மனுக்கு மக்கள் தங்கள் குறைகளை சொல்லி மிளகாய் அரைத்துப் பூசுவார்கள். என்ன வேண்டிக் கொண்டாலும் அது தொன்னூறு நாட்களுக்குள் நிறைவேறிவிடும். வடக்கே காலும், தெற்கே தலையும் வைத்து பிரமாண்ட உருவமாகப் படுத்திருக்கிறாள். இவளது திருமேனி ஆற்று மணலால் ஆனது. மேலே சுதையால் பூசியிருக்கிறாள். லட்சக்கணக்கான மக்களின் குலதேவதையாக விளங்குகிறாள். பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆனைமலையில் அருள்பாலிக்கிறாள்.

தொகுப்பு -நாகலட்சுமி

The post காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தாள் appeared first on Dinakaran.

Related Stories: