×

சந்திராயன்-3 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜினிக் பவர் ஹெட் சோதனை ஓட்டம் வெற்றி: இஸ்ரோ தகவல்

பணகுடி: நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான்-3 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜினிக் பவர் ஹெட் சோதனை ஓட்டம், பணகுடி அருகே இஸ்ரோவில் வெற்றிகரமாக நடந்தது. நெல்லை மாவட்டம், பணகுடி அருகே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் திரவ எரிபொருள் திட்ட வளாகம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் இன்ஜின்கள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பின்னர் அவை ஹரிகோட்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு ராக்கெட் ஏவப்படும். இந்நிலையில் ‘இஸ்ரோ’வில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் 13ம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக செமி கிரையோஜினிக் பவர் ஹெட் இன்ஜின் நேற்று பிற்பகல் இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் மகேந்திரகிரி திரவ எரிபொருள் திட்ட வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் 4 விநாடிகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த தகவலை இஸ்ரோ தெரிவித்துள்ளது.

The post சந்திராயன்-3 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் செமி கிரையோஜினிக் பவர் ஹெட் சோதனை ஓட்டம் வெற்றி: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Chandrayaan ,ISRO ,Panagudi ,South Pole of the Moon ,Panagudi… ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...