×
Saravana Stores

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000/- பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-2023ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிடும் அடையாளமாக 9 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.15,000/-க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி, வாழ்த்தினார்.

திருக்குறள் தமிழர்களின் தலையாய பெருநூலாகும். அதன் ஒன்றே முக்கால் வரிப்பாக்கள் அரிய, பெரிய, சிறந்த சிந்தனையை தூண்டும் எழிலோவியங்கள் ஆகும். கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய் – காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய் – வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய் – மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியாய் – நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்-எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு திருக்குறளை இயற்றிய வான்புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவரின் படத்துடன் திருக்குறளினைப் பொறித்து பொதுமக்களுக்கு திருக்குறளை அறிமுகம் செய்த மாட்சியும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவரின் திருவுருவப் படத்தை நிறுவிய பெருமிதமும், குறளோவியம் தீட்டிய இலக்கியச் செறிவும், சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்த சிறப்பும், அகிலம் போற்றும் அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடியில் குமரி முனையில் வானுயர் திருவள்ளுவர் சிலையையும் அமைத்த பாங்கும் திருக்குறளுக்கு நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய பதக்கங்களாகும்.

அவ்வண்ணமே, ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படும் நாளுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் திருநாள் என்று அறிவித்து முத்தமிழறிஞர் கலைஞர் மேலும் அணிசேர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞர் 2000-ஆம் ஆண்டு முதல் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவ, மாணவியர்களுக்கு குறள் பரிசு வழங்கும் திட்டம் தோற்றுவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆண்டுதோறும் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 812 மாணவச் செல்வங்களுக்கு குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தமிழறிஞர் கலைஞரின் அடியொற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20.01.2023 முதல் குறள் பரிசுத் தொகையை ரூபாய் 10,000/-த்திலிருந்து ரூபாய் 15,000/-ஆக உயர்த்தி வழங்கிட ஆணையிடப்பட்டது.

அந்த வகையில், 2022-2023ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கா. நாகராஜன், மாணவி ரா. விசாலாட்சி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் செ. ஹேம்நாத், வெ. சந்தோஷ், மாணவிகள் சீ. நிவேதா, இர. காவ்யா, து. லோகிதா, செ. லக்க்ஷனா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஞா.ச. சந்தோஷ் ஆகிய ஒன்பது மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் இன்று பரிசுத் தொகை தலா ரூ.15,000/-க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற 124 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : CM ,Tirukepural saturation ,G.K. Stalin ,Chennai ,Tirakkuralu Martypothal tournament ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 10 செ.மீ. மழை பதிவு..!!