பூத்துக் குலுங்கும் சீகை மரங்கள் : சுற்றுலா பயணிகள் வியப்பு

ஊட்டி:  நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் பூத்துள்ள சீகை மர பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை தாரவங்கள், மரங்கள், ஆர்கிட்டுகள் மற்றும் பூங்காக்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் காணப்படும் மலர் செடிகள் உள்ளன. சில சமயங்களில் வனங்களில் ஒரே சமயத்தில் சில மரங்கள் பூத்து குலுங்கும். இது உள்ளூர் மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக ரோடரன்ட், ஜகரண்டா போன்ற மலர்கள் பூக்கும் சமயங்களில், இலைகளை விட மலர்களே மரத்தில் அதிகம் காணப்படும். இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இதே போன்று தான் சீகை மரங்களில் பூக்கும் மலர்களும். அந்நிய தாவரம் என்ற போதிலும், எரிப்பொருள், சாயம், பேப்பர் தயாரிப்பதற்காக கடந்த 30 ஆண்டுக்கு முன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் வனத்துறையினர் நடவு செய்தனர். இந்த மரங்கள் தற்போது பெரும்பாலான பகுதிகளில் காடுகளையும், புல்வெளிகளையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. இவைகளை அகற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த மரங்கள் அதிகளவு சாலையோரங்களில் காணப்படுகிறது. ஊட்டியில் இருந்து கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் கூடலூர் செல்லும் சாலையோரங்களில் அதிகளவு காணப்படுகிறது. ஊட்டி நகரிலும் பல்வேறு பகுதிகளுக்கு ெசல்லும் சாலையோரங்களில் இந்த மலர்கள் பூத்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் அடர் மஞ்சள் நிறத்தில் மரம் முழுக்க பூத்துள்ளது. சில இடங்களில் சோலைகளில் பல மரங்களில் இந்த மலர்கள் பூத்துள்ளதால், அந்த பகுதியே மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது.

Related Stories: