சிங்கப்பூரை போல சென்னையிலும் ஆழ்கடல் அருங்காட்சியகம்!

சென்னையின் புதிய அடையாளமாக உருவாகி இருக்கிறது விஜிபி மரைன் கிங்டம். அயல்நாடுகளில் சுற்றுலா போய் வந்தவர்கள் ‘கடல் சுரங்கம்’ (tunnel aquarium) பற்றி பக்கம், பக்கமாக வியந்துப் பேசுவார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக அப்படியொரு கடல் சுரங்கத்தை இப்போது சென்னையிலேயே உருவாக்கி இருக்கிறார்கள். இனி நாமும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் மட்டுமே காணக்கிடைத்த கடல் சுரங்கம், நம்ம ஊரிலேயே உருவாகி இருக்கிறது என்றால், நமக்கெல்லாம் பெருமைதானே?நம்மூர் கடல் சுரங்கத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோமா?

சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு கொடூரமான கோடைநாளில்தான் கடல் சுரங்கத்துக்குள், புகைப்படக் கலைஞரோடு நுழைந்தோம். வெயிலின் கொடுமை கொஞ்சமும் தெரியாமல், கடலுக்குள்ளேயே வசிப்பதைப் போல குளுகுளு உணர்வில் மகிழ்ந்தோம்.கண்ணுக்கு தெரிந்த தூரம் மட்டிலும் இதுநாள் வரை டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அரியவகை கடல் உயிரினங்கள் உல்லாசமாக சுற்றிக் கொண்டிருந்தன.தயங்கித் தயங்கி கட்டண விவரத்தைப் பார்த்தோம். நமக்கு கட்டுப்படியாகக்கூடிய விலைதான். ஒருமுறை உள்ளே நுழைந்துவிட்டால், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீங்கள் அங்கேயே இருக்கலாம் என்றார்கள். அமர்வதற்கும் ஆங்காங்கே இருக்கைகள் போட்டிருக்கிறார்கள். இதுதான் செல்ஃபீ யுகமாயிற்றே? நமக்குப் பிடித்த கடல்வாழ் உயிரினங்களோடு நாம் செல்ஃபீ எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கிறார்கள். உள்ளே, உணவகம் கூட இருக்கிறது.

கடல் சுரங்கத்தை ரெயின் ஃபாரஸ்ட் ஏரியா, ஜார்ஜியா ஏரியா, மான்குரோவ் ஏரியா, கோஸ்டல் ஏரியா என்று நான்கு பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் தனித்துவமான சிறப்புகள் உண்டு. அந்தந்த பகுதியின் தன்மைக்கு ஏற்ப சிறப்பான வடிவமைப்பு. நான் வேறு ஒரு புதிய உலகத்துக்குள் நுழைந்துவிட்ட அனுபவத்தைப் பெறுகிறோம்.நமக்குத் தெரிந்த மீனெல்லாம் மீன் மார்க்கெட்டில் காணக்கிடைக்கும் மீன்கள்தான்.இங்கே வளர்க்கப்படுபவை இதுநாள் வரை நாம் கண்டறியாத மீன்கள்.காட்டுக்குள் இருக்கும் நதிகளில் வசிக்கக்கூடிய மீன்கள், நன்னீரில் உயிர்வாழும் மீன்கள், சதுப்பு நிலங்களில் தாக்குப்பிடிக்கும் மீன்கள், கடலில் மட்டுமே காணக்கிடைக்கக் கூடிய மீன்கள் என்று ஒட்டுமொத்தமாக 300க்கும் மேற்பட்ட அரியவகை மீன்களை இங்கே காணமுடிகிறது.காடுகளின் நதியைப் போலவும், சதுப்பு நிலங்களைப் போலவும், அலையாத்தி தாவரங்கள் இருக்கும் இடத்தைப் போலவும், கடலைப் போலவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது நான்கு பகுதிகளும்.    

கடல் தேவதை, நியான் டெட்ரா, ரெட் டெவில், சுறா, கவுராமி, பவளப்பாறை மீன்கள், நீலத்தேவதை, கிளவுன், ராஸ், பப்பெட், சிங்க மீன், மெரை ஹில் என்று ஒவ்வொரு மீனின் பெயராக சொல்லிக்கொண்டே போகிறார்கள். கிழங்கான், வஞ்சிரம், கெண்டை என்று பத்துக்கும் குறைவான மீன்வகைகளை மட்டுமே அறிந்த நமக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிகின்றன.பார்ப்பதற்கு மட்டுமல்ல. மீன்களோடு விளையாடுவதற்கும் வசதி செய்துக் கொடுத்திருக்கிறார்கள். டச்சபுள் டேங்க் (touchable tank) என்று ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தத் தொட்டியை சுற்றிலும் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள். அதில் வசிக்கும் மீன்களை நாம் வெறும் கையாலேயே தொடலாம்.அவற்றோடு விளையாடலாம்.மரைன் கிங்டமின் சிறப்பே டனல் அக்குவேரியம்தான். இந்தச் சுரங்கம் 70 மீட்டருக்கு நீளுகிறது. பார்வைக்கு கோணல்மாணலான அரை வட்டத்தைப் போல இருக்கும். தடிமனான கண்ணாடி சுவர். இச்சுரங்கத்துக்குள் நுழைந்ததுமே ஆழ்கடலில் நடக்கும் அனுபவத்தை எட்டுகிறோம். நடக்க முடியாமல் சிரமப்படும் வயதானவர்களுக்காக இங்கே எஸ்குலேட்டர் வசதியும் செய்துக் கொடுத்திருக்கிறார்கள்.

எந்தப் பக்கம் பார்த்தாலும் இங்கே கடல்தான். திடீரென வெள்ளை நிறத்தில் பெரிய மீன் ஒன்று    நம் தலைக்கு மேலே போகும். மூழ்கிய கப்பல், சிற்பங்கள், கோயில்கள் என நிஜமான கடலே நம் கண்முன் தோன்றி மறைகிறது. மீன்களோடு மீனாக ‘டைவர்ஸ்கள்’ உள்ளே இருக்கிறார்கள். முதலில் அவர்களை பார்க்கும் போது பொம்மைகள் என்றுதான் நினைப்போம். அவர்கள் நிஜமான டைவர்ஸ்கள் தானாம். அவர்களின்  வேலை மீன்களின் கழிவுகளை சுத்தம் செய்து மீன்களுக்கு உணவு ஊட்டுவது. குறைந்தது இரண்டு மணி நேரம் அவர்கள் தண்ணீருக்குள்இருக்கிறார்கள். தொடர்ச்சியாக  தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது.கடல் ராஜ்ஜியத்தை காண விரும்புபவர்கள் மரைன் கிங்டமுக்கு ஒருமுறை விசிட் அடிக்கலாம்.

- தீக்சாதனம்

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!