பைக்காரா அணையில் படகு சவாரி: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி அருகேயுள்ள பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி மேற்கொள்கின்றனர். ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஊட்டி - கூடலூர் சாலையில் 20 கி.மீ., தொலைவில் உள்ள பைக்காரா அணையில் கடந்த சில ஆண்டுக்கு முன் படகு சவாரியை சுற்றுலாத்துறை துவக்கியது. துவக்கத்தில் இங்கு மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டன. இந்த ஆணை மிகவும் ஆழமானதாக உள்ளதாலும், எப்போதும் காற்று அதிகமாக வீசும் என்பதால், தண்ணீரில் அலையின் வேகமும் சற்று அதிகமாக காணப்படும். இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மிதி படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் இயக்குவது ரத்து செய்யப்பட்டது. தற்போது மோட்டார் படகுகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
அதேசமயம், இங்கு வேகமாக இயங்க கூடிய ஸ்பீடு போட்டுக்களும் இயக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே அமைந்துள்ள இந்த அணையில் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  மேலும் இம்மாதம் 3ம் தேதி துவங்கிய மழை 9ம் தேதி வரை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, நீர் பிடிப்பு பகுதிகளான பைக்காரா, முக்குறுத்தி, அவலாஞ்சி, அப்பர்பவானி, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி பகுதிகளில் வெளுத்து வாங்கியது. இந்த கன மழையால், நான்கு நாட்களில் அணைகள் நிரம்பி வழிந்தது. கடந்த 3ம் தேதி 100 அடி உயரம் கொண்ட பைக்காரா அணையில் 38 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. ஆனால், கனமழையால் 8ம் தேதி அணையில் முழு கொள்ளளவான 100 அடியையும் தாண்டி தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டது. இன்று வரை அணை நிரம்பி வழிகிறது. இதனால், இங்குள்ள மின் நிலையத்தில் 24 மணி நேரமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.  தற்போது கடல் போல் காட்சியளிக்கும் இந்த அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 10 படிகள் கூட இறங்கினாலே படகு நிறுத்தும் இடம் வந்து விடுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!