தேயிலை பூங்காவில் கார்னேசன் மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி  ஏற்பட்டதால், மாற்றுத் தொழில் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. இதனை  தொடர்ந்து ஒரு சில விவசாயிகள் கொய் மலர் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால்,  அவர்களுக்கு தரமான நாற்றுகள், குளிர் பதன வசதிகள், ஏற்றுமதிக்கான வழிகள்  ஏதும் கிடைக்காமல் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டனர். அதிக விலை கொடுத்து  நாற்றுகள் வாங்க முடியாமல், விவசாயிகள் திண்டாடி வந்தனர். இதனை தொடர்ந்து  தோட்டக்கலை துறை மலர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறைந்த  விலையில் கார்னேசன் நாற்றுகள் விற்பனை செய்யும் வகையில், தும்மனட்டியில்  நாற்று உற்பத்தி மையத்தை துவக்கியது. கடந்த மூன்று ஆண்டுக்கு மேலாக இங்கு  நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில்  விநியோகம் செய்யப்படுகிறது.
Advertising
Advertising

  இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த  விவசாயிகளும் இந்த மலர் நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில்,  விவசாயிகளுக்கு மட்டும் வழங்காமல், தோட்டக்கலைத்துறையும் பல்வேறு இடங்களில்  பசுமை குடில்கள் அமைத்து கார்னேசன் மலர்களை உற்பத்தி செய்து குறைந்த  விலையில் விற்பனை செய்கிறது. இதன் ஒரு பகுதியாக தற்ேபாது தேயிலை  பூங்காவிலும் ஒரு பசுமை குடிலை அமைத்து அங்கு 12 ஆயிரம் கார்னேசன் மலர்  நாற்றுகளை நட்டுள்ளது. தற்போது இவைகள் பெரிய செடிகளாக வளர்ந்து மலர்களும்  பூக்கத்துவங்கியுள்ளன. நான்கு வண்ணங்களில் பூக்கும் இந்த மலர்கள் தற்போது  விற்பனைக்கு தயாராகி வருகிறது. ஓரிரு நாட்களில் அனைத்து செடிகளிலும்  மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   மேலும் மலர்கள்  பூத்தவுடன் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படும்.  இதனை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்லலாம் என  தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: