டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் சாராய வேட்டை: அல்லேரி மலையில் டிஐஜி தலைமையில் அதிரடி

வேலூர், ஜூன் 18: வேலூர் அல்லேரி மலையில் டிரோன் கேமராக்கள் உதவியுடன் டிஐஜி தலைமையிலான போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 50 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில், எஸ்பி மணிவண்ணன், ஏஎஸ்பி பிரசன்னகுமார், ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் தனிப்படை போலீசார் நேற்று டிரோன் கேமராக்கள் மூலம் வேலூர் அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் முழுமையாக கள்ளச்சாராய சோதனை நடத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் 20 குழுக்களாக பிரிந்து போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கடத்தல் என பல்வேறு வகைகளில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 வழக்குகள் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டு 3 ஆயிரத்து 50 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், 870 லிட்டர் கள்ளச்சாராயமும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கள்ளச்சந்தையில் விற்கப்பட இருந்த டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அதோடு இருசக்கர வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும் என்றும், கள்ளச்சாராய ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் சாராய வேட்டை: அல்லேரி மலையில் டிஐஜி தலைமையில் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: