நீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீண்ட நாட்களுக்கு பின், ஒகேனக்கல்லில் நேற்று குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் உற்சாகமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாதமாக பள்ளி தேர்வு மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தலையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இதனால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் வருவாயின்றி தவிப்பில் இருந்தனர். இந்நிலையில், நேற்று நீண்ட நாட்களுக்கு பின், திரளான சுற்றுலா பயணிகளை ஒகேனக்கல்லில் காண முடிந்தது.
Advertising
Advertising

காலை முதலே கார் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் உள்ளூர் மட்டுமின்றி, கர்நாடக பகுதியில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். முதலை பண்ணை மீன் காட்சியகம், தொங்குபாலம் முதலிய இடங்களை அவர்கள் சுற்றிப்பார்த்தனர். பின்னர் ஊட்டமலை பரிசல் துறையில் இருந்து ஏரளமான பயணிகள் பரிசலில் சென்று இயற்கை அழகை கண்டு களித்தனர். நீண்ட நாட்களுக்குப்பின் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்ததால், மீன் வியாபாரிகள், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒகேனக்கல் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் மேற்கொண்டனர். தேர்தல் மற்றும் பள்ளித்தேர்வுகள் முடிந்த பின்னர் தான் இன்னும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: