நீலகிரியில் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்க திட்டம்

*வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தகவல்

ஊட்டி : இந்தியாவின் முதல் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்புள்ளது எனவும் இதற்காக நீலகிரியில் மின் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரைகள் வரப்பெற்றுள்ளது எனவும் ஊட்டியில் ‘கார்பன் நியூட்ரல் நீலகிரிஸ்’ என்னும் தலைப்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு வனம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் ‘கார்பன் நியூட்ரல் நீலகிரிஸ்’ என்ற கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் ஊட்டி தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்தது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இயக்குநர் தீபக் பில்ஜி வரவேற்றார்.

இதையடுத்து கூட்டத்துக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமை வகித்து பேசியதாவது: கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அரசு கொள்கை வகுத்து செயல்பட்டு வருகிறது. இதனடிப்படையில் கடந்தாண்டு மாநிலத்தில் 3 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், 80 சதவீத மரக்கன்றுகள் உயிர் பிழைத்துள்ளன.

தமிழகம் முழுவதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 7 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனங்களில் பசுமை போர்வையை மீட்டெடுக்க மரக்கன்றுகள் நடவு பணி உதவும். சீரழிந்த வனங்களை மீட்டெடுத்தல் நடவடிக்கைக்காக நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் 5 ஆண்டுக்கு ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வனங்களை மீட்டெடுக்கும் போது மனித – வனவிலங்கு மோதல்களும் குறையும் சூழல் ஏற்படும். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் சதுப்பு நிலங்களில் பொருளாதார மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சதுப்பு நிலத்தின் பொருளாதார மதிப்பு ரூ.54 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் மேலும் 60 சதுர கிமீ பரப்பளவிற்கு மாங்க்ரோவ் காடுகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காலநிலை மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசு கொள்கை வகுத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் தமிழகத்தின் தண்ணீர் தொட்டியாக உள்ளது. நீலகிரி மாவட்டம் வனப்பரப்பு மிகுந்துள்ள பகுதியாக விளங்குகிறது. இங்கு உயிர் சூழல் மண்டல பாதுகாப்பு முக்கியமானதாகும். 4 ஆறுகள் இங்குள்ள சோலை மற்றும் புல்வெளிகள் மூலம் உற்பத்தியாகின்றன. மேலும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு இணைந்த மும்மாநில எல்லையில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்கள், 4 ஊராட்சி ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், 35 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள ஒவ்ெவாருவரும் கரியமில வாயுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறிந்திருப்பது அவசியம்.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் முதல் காலநிலை மாற்றம் குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர் காலநிலை மாற்றம் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் முதல் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்புள்ளது. நீலகிரியில் வாகன போக்குவரத்து சமீபகாலமாக அதிகமாக உள்ளதாலும், சுற்றுலாவும் அதிகமாக இருப்பதாலும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க இங்கு மின் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்.

நீலகிரியின் பசுமை போர்வை அதிகரிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை இன்னும் கூடுதல் கண்காணிப்பு செலுத்தி குறைக்க நடவடிக்கை எடுப்பது என பரிந்துரைகள் வரப்பெற்றுள்ளன. நீலகிரிக்கு என தனியாக ஒருங்கிணைந்த கரியமில வாயு வெளியேற்றம் குறித்த திட்டம் தயாரிப்பது, இதனை பயன்படுத்தி எவ்வளவு கரியமில மாசுபாடு ஏற்படுகிறது, எவ்வாறு குறைப்பது என்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது.

3 மாதங்களில் ஒரு ஒருங்கிணைத்த திட்டம் தயாரிக்கப்படும். நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரியமில வாயு வெளியேற்ற திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து திட்டமிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித், தமிழ்நாடு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், மான்டெக் சிங் அலுவாலியா, எரிக் சோல்ஹிம், ராமசந்திரன், சவுமியா சுவாமிநாதன், நிர்மலாராஜா, ரமேஷ் ராமசந்திரன், சுந்தரராஜன் கலந்து கொண்டனர். முடிவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இணை இயக்குநர் எல்.சவுமியா நன்றி கூறினார்.

The post நீலகிரியில் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: