சென்னை விமான நிலையத்தின் மல்டி லெவல் பார்க்கிங்கில் மோதிக்கொண்ட கார்கள்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

சென்னை, ஜூன் 8: சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆறு அடுக்கு அதிநவீன மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதியிலிருந்து செயல்பாட்டிற்கு வந்தது. இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் 700 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உண்டு. அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 4வது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு இறங்கிய ஒரு காரும், தரை தளத்தில் இருந்து மேல்தளத்திற்கு சென்ற காரும், ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டுள்ளன. அந்த இரு கார்களிலும் பயணிகள் யாரும் இல்லை. டிரைவர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இடையே கார்களுக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டது. இரண்டு கார் டிரைவர்களும் அவர்களுக்குள் சமரசமாக பேசி தீர்த்துக் கொண்டனர். போலீசில் புகார் செய்யவில்லை. இதனால் இந்த சம்பவம், வெளியில் தெரியாமல் முதலில் மறைக்கப்பட்டு விட்டது. ஆனால், விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிரைவர்கள் தரப்பில் கூறியதாவது: விமான நிலைய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் முறையான அறிவிப்பு பலகைகள் இல்லை. தனித்தனி வழிகள் இருந்தாலும் சில வாகனங்கள் தவறான வழிகளில் வந்து விடுகிறது. அதை தடுக்க தடுப்பு பலகைகள் வைக்கவேண்டும். அந்தப் பகுதியில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். அதையும் மீறி தவறாக வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்காக வளைவுகளில் நிலைக்கண்ணாடி அமைக்கவேண்டும். எனவே இனி மேலும் பெரிய அளவில் விபத்துகள் நடந்து பாதிப்புகள் ஏற்படாதவாறு, வளைவு பகுதிகளில் பெரிய அளவில் கண்ணாடிகள் அமைக்கவேண்டும் என்றனர்.

தனியார் ஒப்பந்த நிறுவனமே பொறுப்பாம்…
சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘மல்டி லெவல் கார் பார்க்கிங்கை, இந்திய விமான நிலைய ஆணையம் அமைத்தது. ஆனால், அது கடந்த டிசம்பர் மாதமே தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து, தனியார் ஒப்பந்த நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் அதில் தலையிட முடியாது’’ என்று தெரிவித்தனர்.

The post சென்னை விமான நிலையத்தின் மல்டி லெவல் பார்க்கிங்கில் மோதிக்கொண்ட கார்கள்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: