வெயிலில் மீன் விற்ற தந்தைக்கு வியாபாரத்திற்காக ஏசி கார் வாங்கி கொடுத்த மகன்

ராமநாதபுரம்: தன்னை ஆளாக்கிய தந்தை வெயிலில் மீன் விற்க கூடாது என்பதற்காக ரூ.14 லட்சத்தில் ஏசி கார் வாங்கி கொடுத்து, மீன் வியாபாரம் பார்க்க சொன்ன மகன். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம்(61), விவசாயியான இவர் தனது மனைவி காளியம்மாளை உதவிக்கு வைத்துக்கொண்டு ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், கீழக்கரை என இப்பகுதி கண்மாய், குளங்களில் மீன் பிடித்து அதனை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை வைத்து சுரேஷ்கண்ணன் என்ற ஒரு மகனை மரைன் இன்ஜினீயரிங் படிக்க வைத்தும், இரு மகள்களையும் படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் படிப்பை முடித்த சுரேஷ்கண்ணன் வளாகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று வளைகுடா நாட்டில் வேலைக்கு சென்றார். கை நிறைய சம்பளம் கிடைத்ததும், ஓட்டு வீட்டிலிருந்த தனது குடும்பத்தினருக்கு சென்ட்ரிங் வீடு கட்டி கொடுத்து, இரண்டு சகோதரிகளையும் திருமணம் முடித்து கொடுத்துவிட்டார். இது போக குடும்பத்திற்கு மாதம்,மாதம் பணமும் அனுப்பி வருகிறார். அனைத்து கடமைகளும் முடிந்து விட்டதால், சுரேஷ்கண்ணன் பெற்றோரை வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் மீன் பிடித்து வியாபாரம் செய்வதை பெற்றோர் விடவில்லை. இதனால் பெற்றோர் வெயிலில் சென்று வியாபாரம் பார்க்கக் கூடாது என்பதற்காக நண்பர்கள் மூலமாக ரூ.14லட்சத்திற்கு புதிய சொகுசு கார் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்து சிவானந்தம் கூறும்போது. விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், விவசாயம் போதிய அளவு கைக்கொடுக்காததால் மீன் பிடித்து அதனை விற்று குடும்பம் நடத்தி வந்தேன், நான், எனது மனைவியும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்ததை சிறு வயது முதல் சுரேஷ்கண்ணன் அருகில் இருந்து பார்த்து வளர்ந்தார், படிக்கும் காலத்தில், விடுமுறை தினங்களில் கூட அவர் உதவிக்கு வருவேன் என்றாலும் கூட நாங்க அழைத்து செல்ல மாட்டோம், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த சொல்வோம், அதன்படி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படித்து இன்று குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் எனக்கு உடல்நிலை சரியில்லை, வயதாகி விட்டது எனவே வியாபாரத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். இருந்த போதிலும் தொழிலை விட மனது இல்லை, இதனால் தற்போது வரை மீன் வியாபாரம் செய்து வருகிறேன், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது, இதனால் இருதய நோயாளியான நான் கஷ்டப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வியாபாரம் செய்வதற்காக ஒரு காரை வாங்கி கொடுத்துள்ளார், எனவே அந்த காரில் சென்று வியாபாரம் செய்து வருகிறேன் என்றார்.

The post வெயிலில் மீன் விற்ற தந்தைக்கு வியாபாரத்திற்காக ஏசி கார் வாங்கி கொடுத்த மகன் appeared first on Dinakaran.

Related Stories: